திரை விமர்சனம்: கோழிப்பண்ணை செல்லதுரை

By செய்திப்பிரிவு

சிறுவயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் (ஏகன்), அவனது தங்கை ஜெயசுதாவுக்கும் (சத்யா) கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமி (யோகிபாபு) ஆதரவளிக்கிறார். பின் பெரியசாமியின் கோழிக் கடையில் பணியாற்றி தங்கையைக் கல்லூரியில் படிக்க வைக்கிறான்செல்லதுரை. அவரை, அருகில் பானைக்கடை வைத்திருக்கும் தாமரைச்செல்வி (பிரிகிடா சகா), காதலிக்கிறார். சூழ்நிலை காரணமாக அதை அவன் புறக்கணிக்கிறான். இந்நிலையில் தன் கல்லூரியில் அறிமுகமாகும் ஒருவருடன் தங்கைக்கு காதல் ஏற்படுகிறது. இதனால் செல்லதுரை வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? அவன் பெற்றோர் என்ன ஆனார்கள்? தாமரைச்செல்வியின் காதல் என்ன ஆனது? என்கிற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது மீதிக் கதை.

எளிய மக்களின் வாழ்வியலையும் மனிதஉணர்வுகளையும் பதிவுசெய்யும் திரைப்படங்களை வழங்கி வருபவர் சீனு ராமசாமி. முந்தைய படங்களில் எளிய மனிதர்களாக முன்னணி நட்சத்திரங்களை மாற்றியவர், இதில் புதுமுகங்களை நடிக்க வைத்திருப்பது சிறப்பு.

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை எவ்வளவு துயரமானது என்பதை மிகையின்றி அழுத்தமாகப் பதிவுசெய்கின்றன தொடக்கக் காட்சிகள். பின் செல்லதுரையையும் அவனது தங்கையையும் சுற்றி பெரியசாமி, தாமரைச் செல்வி, உடன்பணியாற்றுபவர்கள் என ரத்த உறவால் பிணைக்கப்படாத ஒரு குடும்பம் உருவாவதும் அவர்களுக்கிடையிலான அன்பும் அக்கறையும் கொண்ட காட்சிகள் மனதைத் தொடுகின்றன. வேறோரு ஆணுடன் சென்று பின்ஆதரவற்றவராகிவிட்ட தாயையும் உயிர்காக்கும் சிகிச்சைக்காகப் போராடும் தந்தையையும் செல்லதுரை எதிர்கொள்ளும் விதம், எளிய மனிதர்கள் அன்பையும் பரிவையுமே முதன்மைப்படுத்துவார்கள் என்பதை உணர்த்துகின்றன.

ஆங்காங்கு ரசிக்கத்தக்க விஷயங்கள்இருந்தாலும் ஒட்டுமொத்த கதையில் அழுத்தமான அம்சங்கள் எதுவும் இல்லை. திருநங்கைஒருவரை இடதுசாரி செயற்பாட்டாளராக காண்பித்திருப்பது, போருக்கு எதிரான வசனங்கள், அரசு மருத்துவ சேவையின் மகத்துவம் பேசுவது போன்றவை முற்போக்குக் அம்சங்கள் வேண்டும் என்பதற்காக திணிக்கப்பட்டதாக தோன்றுகின்றன. தன் தங்கை , ஒருவரைக் காதலிக்கிறார் என்பதை கோபத்துடன் செல்லதுரை எதிர்கொள்வது ஏன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. இரண்டாம் பாதியின் பெரும்பகுதியை தேவைக்கதிகமாக நீட்டியிருக்கிறார்கள். பார்வையாளரின் கவனத்தை தக்கவைக்கத் தவறுகிறது திரைக்கதை.

ஏகன் சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கை மீதான பாசம், தன்னை அவமானப்படுத்த முயல்வோரிடம் காட்டும் கோபம், சக மனிதர்கள் மீதான அன்பு என அனைத்தையும் யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார். யோகிபாபு சென்டிமென்ட் நடிப்பில் ரசிக்க வைக்கிறார். ஜெயசுதா, பிரிகிடா சகா இருவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நாயகனுடன் பணியாற்றுபவராக வரும் குட்டிப்புலி தினேஷ் பேசும் வசனங்கள் கலகலப்பூட்டுகின்றன. ரகுநந்தனின் பின்னணி இசை கதையின் உணர்வுக்கு வலுசேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ், தேனி மலைப்பகுதிகளின் குளிரையும் வராக நதியின் சில்லிப்பையும் உணரச் செய்திருக்கிறார். எளிய மக்களின் வாழ்வியலைப் பேசியிருந்தாலும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இந்தச் செல்லதுரையின் கதையை முழுமையாக ரசித்திருக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE