பெப்சிக்கு நடிகர் சங்கம் கண்டனம்

By செய்திப்பிரிவு

நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகில், மறு சீரமைப்பைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்துக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில், அனைத்து திரையுலக தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான 37 பரிந்துரைகளை நடிகர் சங்கம் வழங்கியது. தனுஷ் விஷயத்திலும் நடிகர் சங்கம் முன்னெடுத்த முயற்சியால் தீர்வு ஏற்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதனிடையே தனுஷ் பிரச்சினை தொடர்பாக விசாரிக்க, கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.

தயாரிப்பாளர்கள்-நடிகர்கள் இடையிலான சிக்கல்களை இரு அமைப்புகளும் சுமுகமாகக் கையாண்டு வரும்போது, பெப்சி வலிய தலையிட்டு, இல்லாத கருத்தைத் தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. தொழிலாளர்களைப் பின்புலமாக நிறுத்தி, பெப்சி நிர்வாகம் தங்களை அதிகார மையமாகச் சித்தரித்து, பிற சங்கங்களின் அலுவல்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன், பெப்சி நிர்வாகத்தின் இத்தகைய வரம்பு கடந்த செயல்பாடுகளையும், சர்ச்சையை ஏற்படுத்தும் அறிக்கைகளையும், தயாரிப்பாளர்கள் சங்கமும் கண்டிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE