அடுத்த ஆண்டு ரஜினி 50 - விழா எடுக்குமா திரையுலகம்?

By ஸ்டார்க்கர்

சென்னை: திரையுலகில் அடுத்த ஆண்டு 50 ஆண்டுகளைத் தொடுகிறார் ரஜினி. இதனை திரையுலகினர் கொண்டாடுவார்களா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரஜினி. 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு நாயகனாக வளர்ந்து, இப்போது உலகளவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக இருக்கிறார் ரஜினி. 2025-ம் ஆண்டு திரையுலகில் 50 ஆண்டுகளை தொடுகிறார் ரஜினி. இதனை முன்னிட்டு திரையுலகினர் சார்பில் விழா ஏதேனும் எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘கமல் 50’ என்ற பெயரில் கமலின் திரையுலக 50 ஆண்டுகள் கொண்டாடப்பட்டது. இதனை விஜய் டிவி எடுத்து செய்தது.அதே போன்று ‘ரஜினி 50’ என்ற பெயரில் விழா எடுக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவருடைய எதிர்பார்ப்பும்.

ஏனென்றால், திரையுலகில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர் ரஜினி. மறைந்த இயக்குநர் பாலசந்தர் தொடங்கி இப்போது வரும் இளம் இயக்குநர்கள் வரை அனைவருடனும் பணிபுரிந்து விட்டார். நடிகர் சங்கம் சார்பில் விழா எடுக்கப்படுவது கேள்விக்குறி தான். ஏனென்றால் அவர்களிடம் இருக்கும் பணத்தினை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தை முடிக்க உறுதியுடன் இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கமோ இரண்டாக பிரிந்து முழுக்க சர்ச்சையாகவே இருக்கிறது. இந்த இரண்டு சங்கங்களும் ஒன்றாக இணைந்து உட்கார்ந்து பேசி ‘ரஜினி 50’ என்ற பெயரில் விழா எடுக்க வேண்டும் என்பது தான் திரையுலகினரின் எதிர்பார்ப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE