“விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமியர்கள்தான் காப்பாற்றினார்கள்” - ‘வாழை’ வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் 

By செய்திப்பிரிவு

சென்னை: விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமிய மக்கள்தான் காப்பாற்றினார்கள் என்பதை என்னைவிட தப்பித்தவர்கள் சொல்கிறார்கள் என்பதே மிகப்பெரிய சந்தோசம். விபத்தில் சிக்கியவர்களை ஜாதி, மதம் பார்க்காமல் காப்பாற்றிய அத்தனை மக்களுக்கும் இந்த மேடையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

மாரி செல்வராஜ் இயக்கிய ‘வாழை’ படத்தின் வெற்றிவிழா சென்னையில் இன்று (செப்.16) நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது: 'வாழை' படத்தின் வெற்றிக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியது என்னுடைய சக திரையுலக கலைஞர்களுக்குத்தான். அவர்கள் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த படத்தின் மூலம் நான் புரிந்து கொண்டேன். நிகிலா விமலை ‘கர்ணன்’, பிறகு ‘மாமன்னன்’ படங்களில் நடிக்க வைக்க முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. படத்தின் கிளைமாக்ஸில் டீச்சர் எங்கே சென்றார் என்று பலரும் கேட்டனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் டீச்சரின் தேதி கிடைக்கவில்லை.

உண்மையில் படத்தின் க்ளைமாக்ஸ் பாடலை படம் எடுத்து முடித்து ஒரு ஆண்டு கழித்துதான் எடுத்தேன். அதில் தன் தாயின் மடியில் தலைவைத்து சிவனைந்தன் படுத்திருப்பான். உண்மையில் டீச்சரின் மடியில் அவன் படுத்திருப்பது போன்றுதான் வைக்க நினைத்தேன். அப்படி வைத்திருந்தால் இப்போது சிலர் வைக்கும் மோசமான குற்றச்சாட்டுகளுக்கான பதிலாக அது இருந்திருக்கும். என் வாழ்க்கையில் நான் மிகவும் வருத்தப்பட்டது அந்த காட்சியை வைக்காமல் விட்டதற்காகத்தான். என்னுடைய நிஜ வாழ்க்கையில் என்னுடைய அத்தனை ஆசிரியர்களும் அங்கு இருந்தார்கள்.

ஒரு எளிய உண்மை தமிழ்ச் சமூகத்தை எந்த அளவுக்கு தொந்தரவு செய்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். வலியதைவிட எளியதுக்கே மதிப்பு அதிகம். எனக்கு சந்தோஷ் நாராயணன் மிகவும் ஷ்பெஷல். ’வாழை’ படத்தை நான்தான் பண்ணுவேன் என்று அடம்பிடித்து இந்த படத்துக்குள் வந்தார். என்னுடைய பெருமை இந்த படத்தில் நடித்த சிறுவர்கள்தான். எனக்குப் பிறகு என் ஊரிலிருந்து இவர்களை கூட்டிவந்து இங்கு நிறுத்தியதுதான் என்னுடைய பெருமை.

’வாழை’ படத்தில் எங்களை காட்டவில்லை என்று நிறைய பேர் கோபித்துக் கொண்டார்கள். ‘வாழை’ எனக்கும் அந்த குறிப்பிட்ட நாளுக்குமான கதை. அந்த சம்பவம் நடந்தபோது நான் அங்கு இல்லை. ஆனால் அந்த விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமிய மக்கள்தான் காப்பாற்றினார்கள் என்ற உண்மை இதன் மூலம் வெளியே வந்ததே எனக்கு போதும். அந்த உண்மையை நான் இப்போது சொல்கிறேன். விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமிய மக்கள்தான் காப்பாற்றினார்கள் என்பதை என்னைவிட தப்பித்தவர்கள் சொல்கிறார்கள் என்பதே மிகப்பெரிய சந்தோசம். விபத்தில் சிக்கியவர்களை ஜாதி, மதம் பார்க்காமல் காப்பாற்றிய அத்தனை மக்களுக்கும் இந்த மேடையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE