வித்தியாச கதை, ரஜினி தந்த ஐடியா - ‘வேட்டையன்’ சீக்ரெட்ஸ் பகிர்ந்த அனிருத்

By ஸ்டார்க்கர்

‘வேட்டையன்’ படம் குறித்தும், ‘மனசிலாயோ’ பாடல் குறித்தும் பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ளது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் படத்திலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘மனசிலாயோ’ பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு பலரும் ‘மனசிலாயோ’ பாடலை வைத்து ரீல்ஸ் வெளியிட்டார்கள்.

இதனிடையே, ‘வேட்டையன்’ படம் மற்றும் ‘மனசிலாயோ’ பாடல் குறித்து அனிருத் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’ஜெய்பீம்’ படம் ரொம்பவே பிடித்த படம். அந்தவகையில், ஞானவேல் சார் இந்தக் கதையை சொன்னபோது, ரஜினி சார் இப்படியொரு கதையில் நடிப்பது புதுமையாக இருந்தது.

இப்போது இப்படியான வலுவான கதை மக்களுக்கு ரொம்ப பிடிக்கிறது. நல்ல படம் என்று பெயர் வாங்கும் என பெரிய நம்பிக்கை இருக்கிறது. ரஜினி சார் இப்படியான கதையில் நடிப்பதால் இந்தக் கதையின் ரீச் வேறு மாதிரி இருக்கும். ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் ‘வேட்டையன்’ வித்தியாசமான படம். ஒரு பிரச்சினையை மையப்படுத்திய படம். கதையாகவே வித்தியாசமானது. ரஜினி சாருக்கும், எனக்குமே களமாகவே ‘வேட்டையன்’ ரொம்பவே புதிது.

‘மனசிலாயோ’ பாடல் படப்பிடிப்பின்போது ஒரு சின்ன கேமியோ செய்கிறீர்களா என்று இயக்குநர் கேட்டார். ‘மனசிலாயோ’ வார்த்தை ஏற்கெனவே பிரபலம் என்பதால், அதை வைத்து பண்ணலாம் என்பது ஒரு ஐடியா. கதைப்படி தமிழ்நாடு, கேரளா எல்லையில் இந்தப் பாடல் இருக்கும் என்பதால் இப்படி உருவாக்கி இருக்கிறோம். பாடல் ரொம்ப கருத்தாக இல்லாமல், சின்ன சின்ன விஷயங்கள் சொல்லலாம் என்று வைத்துள்ளோம்.

பாடல் படப்பிடிப்பு என்னுடைய வாய்ஸில்தான் நடந்தது. அப்போது கேரவேனில் ரஜினி சாருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தான் மலேசிய வாசுதேவன் குரலில் இந்தப் பாடல் இருந்தால் எப்படியிருக்கும் எனக் கேட்டார். இருவரும் இணைந்து நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள். ரஜினி சார் சொன்னது அற்புதமான ஐடியாவாக இருந்தது. மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் தான் பாடிக் கொடுத்தார். 80-களில் உள்ள குரல் இருந்தால் எப்படியிருக்கும் என எண்ணினேன். அதைத்தான் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கினோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் அனிருத்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE