‘சுயமரியாதையே முக்கியம்’ - குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை

By செய்திப்பிரிவு

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தொகுப்பாளர் மணிமேகலை அறிவித்துள்ளார். பணம், பொருள், புகழ், வாய்ப்பு, தொழில் என அனைத்தையும் விட சுயமரியாதை மிகவும் முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்து சமூக வலைதள பதிவில் தெரிவித்தது: “நான் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை. நான் ஒப்பந்தம் ஆகும் நிகழ்ச்சிகளில் நூறு சதவீத முயற்சியையும், உழைப்பையும் செலுத்துவது வழக்கம். இதையே தான் கடந்த 2019 நவம்பர் முதல் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் நான் செய்தேன்.

ஆனால், அனைத்தையும் விட சுயமரியாதை தான் முக்கியம். புகழ், பணம், தொழில், வாய்ப்பு என அனைத்தையும் விட சுயமரியாதை முக்கியமானது. மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன்.

இந்த சீசனில் ‘குக்’ ஆக பங்கேற்றுள்ள பெண் தொகுப்பாளர், தனது பணியை செய்யாமல் தொகுப்பாளராக செயல்பட்டு, எனது பணியை செய்ய இடையூறு அளிக்கிறார். இது தொடர்பாக நான் குரல் கொடுப்பதும் குற்றமாகிறது. இது நான் முன்பு பணியாற்றிய அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியல்ல. அதனால் இனி நான் இந்த நிகழ்ச்சியில் தொடர போவது இல்லை.

என்னுடைய 15 ஆண்டுகால தொகுப்பாளர் பயணத்தில் இது போன்ற சூழலை நான் சந்தித்தது இல்லை. எனக்கு இதை செய்த நபருக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் அவருக்கு அதிக வாய்ப்புகளையும், அதிக நிகழ்ச்சிகளையும் தரட்டும். வாழு, வாழ விடு. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ் தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2019 நவம்பரில் ‘குக் வித் கோமாளி’ முதல் சீசன் தொடங்கியது. தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நகைச்சுவையோடு பரிமாறப்படும் அறுசுவை சமையல் நிகழ்ச்சி இது. இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE