விஜய்யின் ‘தி கோட்’ பட முன்பதிவுக்கு வரவேற்பு எப்படி? - தியேட்டர் நிலவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் நாளை (செப்.5) திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், படத்தில் பல்வேறு சர்ப்ரைஸ்கள் இருப்பதாக வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளதும், விஜய் அடுத்து ஒரு படம் தான் நடிக்க உள்ளார் என்பதும், முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டியுள்ளது.

இதன் எதிரொலியாக சென்னையில் பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளது. முன்னதாக பிவிஆர் போன்ற மால்களில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடத்தில் டிக்கெட் புக்கிங் சென்ற பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முன்பதிவு செய்ய சென்ற ரசிகர்களுக்கு ‘சர்வர்’ பிரச்சினை என அறிவிப்பு வந்த சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மற்ற திரையரங்குகளிலும் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில டிக்கெட்டுகள் மீதம் இருப்பதாக தெரிகிறது. வரும் செப்.7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால் அதையொட்டி ‘தி கோட்’ வெளியாகிறது. இதனால் படம் வெளியாவதில் இருந்து அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்துள்ளது.

‘உட்லாண்ட்ஸ்’, ‘ஆல்பர்ட்’, ‘அண்ணா’ போன்ற ஒற்றை திரையரங்குகளில் டிக்கெட்டுகள் காலியாக உள்ளன. தவிர, மால்களில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனை முடிந்துவிட்டது. இந்த வாரம் மற்ற படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ’தி கோட்’ படத்துக்கான திரைகள் அதிக அளவில் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி: ‘தி கோட்’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வியாழக்கிழமை (செப்.5) மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிகளை திரையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வியாழக்கிழமை 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளன. ஆனால், அதற்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE