“எதிர்பார்ப்பு தேவையற்றது” - ‘கோட்’ தயாரிப்பாளர் அர்ச்சனா

By ஸ்டார்க்கர்

“ஒரு திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு என்பது தேவையற்றது” என்று ‘கோட்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருக்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சிநேகா, மீனாட்சி செளத்ரி, மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் யுவன் பாடல்கள், சரியான விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பெரும் குறையாக இணையத்தில் பேசப்பட்டது.

இது குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், “மிகவும் கஷ்டப்பட்டு ‘கோட்’ எதிர்பார்ப்பை குறைத்திருக்கிறேன். தயாரிப்பாளர்களாக அந்த முடிவை எடுத்தோம். ஏனென்றால் எதிர்பார்ப்பு என்பது ஒரு திரைப்படத்துக்கு மோசமானது.

எதிர்பார்ப்பு என்பது ஒரு புத்தகத்தை படித்துவிட்டு, பின்பு அதை பற்றியான படத்தை பார்ப்பது போலாகும். அப்போது ஒரு காட்சியைப் பார்த்தால் நாம் நினைத்தது மாதிரி எடுத்திருக்க மாட்டார்கள். அவர்களுடைய மனதில் ஒரு கதை வைத்திருப்பார்கள், அது இல்லாமல் ஏமாற்றமாகி விடுவார்கள். அதனாலேயே எதிர்பார்ப்பு என்பது ஒரு படத்துக்கு தேவையற்றது.

பெரிய முதலீடு போடப்பட்டுள்ள படம் என்பதால் வட இந்தியாவில் விளம்பரப்படுத்துவது முக்கியம். ஏனென்றால் ஆக்‌ஷன் படங்கள் அங்கு பெரியளவில் பேசப்படும், வசூல் செய்யும். ஆகையால் நாலு முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில்களில் விளம்பரம் செய்துள்ளோம். பெரிய பில்டப் எல்லாம் செய்யவே இல்லை.

ஏன் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க மாட்டிக்கிறீர்கள் என்பது தான் பெரிய புகார். எனக்கு எதிர்பார்ப்பை அதிகரிப்பதை விட நல்ல படம்தான் கொடுக்க எண்ணம். எதிர்பார்ப்பை அதிகரித்து சுமாரான படம் கொடுப்பதில் விருப்பமில்லை” என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

மேலும், யுவன் பாடல்கள் விமர்சனம் குறித்து “சில பாடல்கள் விமர்சனம் வந்தது உண்மைதான். நாம் அனைவரும் அனிருத்தின் பாடல்கள் கேட்டு கேட்டு பழகியிருக்கிறோம். படமாக பார்க்கும் போது அனைத்துமே பேசப்படும். எப்படி ‘துப்பாக்கி’ படத்தில் பாடல்கள் பட வெளியீட்டிற்கு பின்பு அதிகமாக பேசப்பட்டதோ, அதே போல் ‘கோட்’ பாடல்களும் பேசப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE