திரை விமர்சனம்: கொட்டுக்காளி

By செய்திப்பிரிவு

பாண்டிக்கு (சூரி) என்று முடிவு செய்யப்பட்ட முறைப் பெண் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக, அவர்கள் குடும்பத்தினர் நம்புகின்றனர். அதனால், அவரை பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அந்தப் பயணத்தில், குடும்பத்தினர் இடையிலான உரையாடல் மற்றும் செயல்களின் வழியாக, உண்மையில் யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது? அது எப்படிப்பட்ட பேய்? அதற்கான சிகிச்சை என்ன? என்பதை நுட்பமான காட்சிகளின் வழியாக உணர்த்திச் செல்கிறது கதை.

ஒரு கிராமத்தின் அதிகாலையில் தொடங்குகிறது படம். சாமியாருக்குக் கொடுக்க வேண்டி, கல்லில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் சேவல், அதிலிருந்து விடுபடப் போராடித் தோற்பதை, இறுகிய முகத்துடன் மீனா கவனிக்கும் தொடக்கக் காட்சி, அவளது நிலையை அப்படியே பிரதிபலிக்கிறது. அதேபோல், ‘உனக்கு மீனாவேதான் வேணுமா?’ எனக் கேட்கும் தங்கையைத் தாக்கும் பாண்டியின் ஆணவமும் நமக்கு ஆரம்பத்திலேயே அறிமுகமாகிவிடுகிறது.

பயணத்தில் எங்கோ ஒலிக்கும் பாடல் வரிகளை முணுமுணுக்கும் மீனாவை “பாட்டுக் கேக்குதா உனக்கு! அவனை நினைச்சுப் பாடுனியாடி?” என்று தாக்கும் பாண்டியை, பெண்ணை ஓர் உடமையாகப் பார்க்கும் ஆண் மைய மனோபாவத்தின் உருவமாக நமக்குக் கடத்துகிறது படம்.

குலதெய்வ வழிபாடு, போலீஸ்காரரின் குறுக்கீடு, சேவலுக்குக் கருணை காட்டும் சிறுவன், கிராமத்துக் கடையொன்றில் இளைப்பாறுதல், வழிமறித்து நிற்கும் காளை மாடு, அத்தனை ஓட்டத்துக்கு மத்தியிலும் மதுக்கடையைத் தேடிக் கண்டடையும் பாண்டியின் நண்பர்கள், பேயோட்டுவதில் சாமியார் காட்டும் போலி தொழில் நேர்த்தி எனப் பயண வழியிலும் அதன் முடிவிலும் அங்கத நகைச்சுவைப் பூச்சுடன் நிகழும் அனைத்தும், இன்றைய கிராமிய வாழ்வு, பழமை - நவீனம் இரண்டின் கலவையாக இருப்பதையும் இவற்றுக்கு நடுவில், ஆண் மைய உலகம் மட்டும் மாறுதல்களை ஏற்க மறுத்து இறுகிக் கிடப்பதையும் உணர்த்திச் செல்கிறது இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் கதை.

அதேநேரம், முடிவை கற்பனை செய்துகொள்ளும்படி அம்போவேன விட்டுவிடுவது, பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்.

பாண்டியாக சூரி, மீனாவையும் உறவுப் பெண்களையும் நடுவழியில் தாக்கும் காட்சியில், தான் இயக்குநரின் நடிகன் என்பதைக் காட்டிவிடுகிறார். கொட்டுக்காளியாக, பார்வைகளைக் கொண்டே மிரட்டியிருக்கிறார் அன்னா பென். சிறுவன் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.

பின்னணி இசையைப் பயன்படுத்தாமல், காட்சிகளின் நிகழ்விட ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி, கடினமான காட்சியாக்கச் செயல்முறையைச் சாதித்துக் காட்டியிருக்கிறது படக்குழு. கதாபாத்திரங்களை நின்று நிதானமாகப் பின்தொடரும் ஒளிப்பதிவைத் தந்திருக்கும் சக்தியையும் ‘லைவ் சவுண்ட்’ ஒலிப்பதிவில் துல்லியம் காட்டியிருக்கும் ராகவ், கூடுதல் ஒலி வடிவமைப்பில் பணிபுரிந்திருக்கும் சுரேஜ் ஜி, அழகிய கூத்தன் உள்ளிட்ட கலைஞர்கள் குழுவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆதிக்க மனம் கொண்ட ஆண்களின் ஆணவமும் பெண்ணுலகின் மீது அவர்கள் செலுத்த நினைக்கும் ஆதிக்கத்தின் வெளிப்பாடுகளுமே ‘பேய் பிடித்தல்’ என்று சொன்னால் சரியாக இருக்கும். கொட்டுக்காளி அதைத் தான் உக்கிரமாகத் தொட்டுச் செல்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE