‘ந
டிகையர் திலகம்’ திரைப்படத்தைப் பார்த்தபோது பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வந்து, மனசு ரொம்ப கனமா ஆயிடுச்சு. இவ்வளவு காலம் கழித்து இத்தனை பேர் இன்னும் அம்மாவைப் பற்றி அன்பாகப் பேசுறாங்களே என்ற சந்தோஷம் ஒரு பக்கம்; அந்த வாழ்க்கைல நானும் அடங்கியிருக்கேன் என்கிறபோது சொல்ல முடியாத பாரம் ஒரு பக்கம். ஆனால், திரைப்படம் ரொம்ப திருப்தியா வந்திருக்கு. இதுவரைக்கும் அப்பா - அம்மாவை பற்றி தவறாக வந்த தகவல்களை எல்லாம் துடைச்சு எறியுற மாதிரி இந்தப் படம் அமைஞ்சுருக்கு.. என்று சந்தோஷம் கலந்த நெகிழ்ச்சியில் பேசினார் ஜெமினி கணேசன் - சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி.
‘நடிகையர் திலகம்’ படம் வெளியாகி, வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அவருடன் நேர்காணல்..
படம் பார்த்ததும், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என்ன சொன்னார்கள்?
அம்மா வாழ்வில் நடந்த சம்பவங்கள் எங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுதான். ஆனால், கீர்த்தி சுரேஷை வைத்து அந்த வரலாற்றை மீண்டும் உருவாக்கியது தான் வியப்பாக இருந்தது. குடும்பத்தினர், நண்பர்கள் பார்த்து அசந்துட்டாங்க. ‘‘என்ன, பாட்டில் எல் லாம் போட்டு உடைச்சிருக்கீங்க’’ என்று 14 வயசு பேரன் கேட்கிறான்.
படம் தயாரிக்க எப்படி ஒப்புதல் அளித்தீர்கள்? இந்த அளவுக்கு வரும் என்று எதிர்பார்த்தீர்களா?
அம்மா பற்றி படம், கட்டுரை, ஆவணப்படம் எடுக்கணும்னு யாராவது சொன்னாலே, உடனே ‘நோ’ சொல்லிடுவேன். இந்தப் படக் குழுவினர் அம்மாவின் நண்பரான தாசரி நாராயண ராவ் மூலமாக தொடர்புகொண்டு கேட்டார்கள். தயாரிப்பாளர் அஸ்வினி தத்தின் மகள் ஸ்வப்னா தத், இயக்குநர் நாக் அஸ்வின் இருவரும் வீட்டுக்கு வந்து பேசினாங்க. ‘அம்மா கோமாவுக்கு போயிட்டாங்க. மதுவால் வாழ்க்கையை இழந்துட்டாங்க. கணவன் மோசம் பண்ணிட்டார்.. இப்படியெல்லாம்தான் வரும். அதனால் வேண்டாம்’ என்று அவர்களிடமும் முதலில் கூறினேன். ‘உண்மையைதான் சொல்லப் போறோம். அவரது நடிப்புத் திறமை மட்டுமல்லாது, மனிதத்தன்மை போன்றவற்றை மக்களுக்கு காட்ட வேண்டாமா? கதையை நீங்க ஓகே செய்தால் தான் படம் வரும். இல்லைன்னா டிராப்’ என்றனர். அப்புறம்தான் நம்பிக்கை வந்தது. என்னிடம் நிறைய விஷயங்கள் கேட்டு, கதையாகத் தொகுத்தார்கள். சாவித்ரி உடை, நகைகள் எல்லாம் எப்படி போட்டுக்குவாங்க, என்ன கலர் பிடிக்கும், எந்த மாதிரி பொட்டு வைப்பாங்க என்று பல விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அவர்களது 3 வருஷ கடின உழைப்பில் உருவானதுதான் இந்தப் படம். நிஜத்தை காட்டியிருப்பதால் மனதுக்கு சந்தோஷமா இருக்கு.
அம்மா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்.. எப்படி உணர்கிறீர்கள்?
‘சாவித்ரி அம்மாவாக நடிக்கிறது ரொம்ப கஷ்டம். ஆனா, ஒப்புக்கிட்டேன். எனக்கு கொஞ்சம் உதவ முடியுமா? சாவித்ரி அம்மாவின் அனைத்து மேனரிஸத்தையும் லிஸ்ட் போட்டு தரமுடியுமா?’ என்று கேட்டார் கீர்த்தி சுரேஷ். 25 மேனரிஸம் வரை எழுதிக்கொடுத்தேன். ஆச்சரியம் என்னன்னா, அதில் 15 மேனரிஸங்கள் கீர்த்தியிடம் இயல்பாகவே இருந்தது. கீர்த்தி சாதாரணமா நடக்கிறதே அம்மா மாதிரிதான் இருக்கும். படத்துல அவரது உருவத்துல, அம்மாவையே பார்த்து பிரமிச்சுப் போய், நானும் தம்பியும் உடனே கீர்த்தி வீட்டுக்குப் போய் வாழ்த்தினோம்.
சாவித்ரி பெரிய நடிகையான பிறகும், மரத்தில் ஏறுவது, யானை மீது ஏறுவது போல படத்தில் காட்டப்படுகிறதே..
அம்மா நிஜமாகவே அப்படித்தான். படப்பிடிப்பில் மரங்கள் இருந்தால், அங்கு உள்ள குழந்தைகளோடு குழந்தையா அவங்களும் ஏறி மரத்துல உட்கார்ந்துப்பாங்க. ‘எங்கே சாவித்ரிய காணோம்’னு யூனிட்ல எல்லாரும் தேடுவாங்களாம். ‘மரம் இருந்தா, கண்டிப்பா அதில்தான் ஏறி உட்கார்ந்திருப்பாங்க. கூட்டிட்டு வாங்க’ன்னு டைரக்டர் சொல்வாராம். அதேமாதிரி மிருகங்கள்னாலும் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு பின்னால கட்டின பெரிய நீச்சல் குளத்தில் முங்கி நீச்சல் அடிப்பாங்க. நாங்க சேர்ந்து குளிக்கும்போது, தண்ணிக்கு அடியில காலைக் கிள்ளுவாங்க. ஒரே லூட்டிதான்.
அப்பா ஜெமினிக்கும் உங்களுக்குமான உறவு எப்படி? படத்தில் அது அவ்வளவாக காட்டப்படவில்லையே? தமிழ் சினிமா வில் சாவித்ரியின் பங்கு பற்றியும் காட்டவில்லையே?
அப்பா - அம்மா புகழின் உச்சி யில் இருந்தபோது பிறந்ததால், என் மீது இருவருக்கும் அலாதி பிரியம் உண்டு. அம்மா அதட்டவும் செய்வாங்க; பிறகு சின்னக் குழந்தை மாதிரி விளையாடுவாங்க. அப்பா எப்போதுமே செல்லம். ‘ரொம்ப கண்டிக்காதே. அவளை ஃப்ரீயா விடு’ என்பார். பெண்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தால் அப்பாவுக்கு பிடிக்காது.
அம்மா இவ்வளவு பெரிய நடிகையாகி, பேரும் புகழும் சம்பாதிச்சதுக்கு, அப்பா கொடுத்த ஊக்கம் முக்கிய காரணம். படத்தில் அதை சரியாக காட்டியிருக்காங்க. தவிர, இது அம்மாவின் கதை. நிறைய எடிட் செய்த பிறகே, 3 மணி நேரம் வந்திருக்கிறது. தமிழில் ஆரூர்தாஸ், எம்ஜிஆர் மாமா, சிவாஜி மாமா, ஏவி.எம். செட்டியார். ஏவி.எம்.சரவணன், கமல் ஆகியோரைக் காட்டாமல் இருக்க முடியுமா? 3 மணி நேரத்துக்குள் அடக்க வேண்டும் என, தெலுங்கை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள் ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago