‘அங்காடித் தெரு’ முதல் ‘காக்கா முட்டை’ வரை: சென்னையை பதிவு செய்த 10 படங்கள் | சென்னை தினம் சிறப்பு

By கலிலுல்லா

சென்னை தனது 385-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. ‘வந்தாரை வாழ வைக்கும்’ இந்த நகரத்தின் அழகையும், வளர்ச்சியையும், அந்தந்த காலக்கட்டங்களில் வெளியான தமிழ் படங்கள் நேர்த்தியாக பதிவு செய்திருக்கின்றன. மேலும் சென்னையின் பூர்வகுடிகளை, அவர்கள் வாழும் நிலத்தை யதார்த்தமாக பதிவு செய்த ஆவணங்களாகவும் தமிழ் சினிமாக்கள் திகழ்கின்றன. அது குறித்து பார்ப்போம்.

மே மாதம்: கடந்த 1994-ம் ஆண்டு பாலு இயக்கத்தில் வினீத் நடிப்பில் வெளியான படம் ‘மே மாதம்’. சென்னையை களமாக கொண்ட இந்தப் படத்தில், சென்ட்ரல் ரயில் நிலையம் தொடங்கி, அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம், எல்ஐசி, லைட் ஹவுஸ், மெரினா, ரிப்பன் மாளிகை என பரவலாக பதிவு செய்திருப்பார்கள். ‘மெட்ராஸ சுத்தி பாக்க போறேன்’ பாடலின் வழியே அக்கால சென்னையை கண்முன் நிறுத்தியிருப்பார்கள். குறிப்பாக இரவு நேர சென்னையின் அழகை இப்படம் கச்சிதமாக பதிவு செய்திருக்கும்.

ஆயுத எழுத்து: 2004-ல் வெளியான மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையின் நேப்பியர் பாலத்தை சுற்றியே இருக்கும். தவிர்த்து சில பரவலான இடங்களும் காட்சிப்படுத்திருக்கும். இன்றைக்கு காணாமல் போன ‘டபுள் டக்கர்’ பேருந்தை இப்படத்தில் காதலர்களின் பயணத்தின் வழியே ரசிக்க முடியும்.

சென்னை 28: 2007-ம் ஆண்டு வெளியான வெங்கட் பிரபுவின் மாஸ்டர் பீஸ். சென்னையின் பூர்வகுடி இளைஞர்களின் வாழ்வியலை முடிந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்திருக்கும் இப்படம், ஆர்.ஏ.புரம் அருகிலிருக்கும் ஹவுஸிங் போர்டு குடியிருப்புகளையும், அவர்களின் வாழ்வியலையும் பதிவு செய்திருக்கும். சென்னையின் பல்வேறு மைதானங்களை அதன் இயல்புத்தன்மை மாறாமல் பதிய வைக்கும் இப்படம் சென்னை இளைஞர்களின் ஜாலியான பதிவு.

அங்காடித் தெரு: 2010-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியானது ‘அங்காடித் தெரு’. எந்நேரமும் பரபரப்பு அடங்காமல் சுறுசுறுப்பாய் சுழன்றுகொண்டிருக்கும் தி.நகரின் அழகுக்குள் ஒளிந்திருக்கும் அழுக்குகளை உரித்து காட்டியது இப்படம். வானுயர்ந்த கட்டிடங்களுக்குள் சத்தமில்லாமல் நிகழும் கொடுமைகளையும், விளிம்புநிலை மக்களின் கொத்தடிமை வாழ்க்கையையும், சென்னையின் நிலப்பரப்புடன் சேர்ந்து பதிவு செய்திருந்தார் வசந்தபாலன். ரங்கநாதன் தெருவின் ‘வணிக’ வெறிக்குள் நசுக்கப்படும் குரல்களை பேசும் இப்படைப்பு சென்னையின் முக்கியமான ஆவணப்பதிவு.

மெரினா: காதலர்களின் சுவரில்லாத தாஜ்மஹாலாக திகழும் சென்னை மெரினா கடற்கரையின் ஈரத்தையும், மணலின் வெப்பத்தையும், இரவு நேர உலகத்தையும், லைட் ஹவுஸின் விளக்கொளி அழகையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் பாண்டியராஜ். சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான இப்படம், மெரினாவையும், அங்கு புழங்கும் மக்களையும் பதிவு செய்த முக்கிய பதிவு. இப்படம் 2012-ல் திரையரங்குகளில் வெளியானது.

மெட்ராஸ்: வட சென்னை மக்களின் வாழ்வியல் குறித்த தவறான புரிதல்களை உடைத்த படங்களில் ஒன்று பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’. 2014-ல் கார்த்தி நடிப்பில் வெளியான இப்படம் வட சென்னை மக்களின் வாழ்வியலை கொண்டாட்டத்துடன் நிலவியல்தன்மை மாறாமல் இயல்புடன் பதிவு செய்திருக்கும். அதிலும், ‘எங்க ஊரு மெட்ராஸு’ பாடல் வட சென்னையை குறுக்கு வெட்டுத் தோற்றத்துடன் கொண்டாட்டம், அரசியல், காதல், விளையாட்டு என அந்த மக்களின் வாழ்வியலுக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கும்.

காக்கா முட்டை: இறுக்கமான கட்டிடங்கள், தீப்பெட்டி போன்ற வீடுகள், கூவம், ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய குடியிருப்புகளை உண்மைக்கு நெருக்கமாக காட்டிய முக்கியமான படைப்பு மணிகண்டனின் ‘காக்கா முட்டை’. 2015-ல் வெளியான இந்தப் படம் சென்னையின் இரு வேறு முகங்களையும், எளிய மக்களின் வாழ்வியலையும், அழுத்தமாக பதிவு செய்தது. வட சென்னை மக்களின் வாழ்க்கையை எந்தவித பூச்சுமில்லாமல் உணர்வுகளுடன் வெளிப்படுத்திய இப்படம் தமிழ் சினிமாவின் க்ளாஸிக்!

கற்றது தமிழ், தரமணி: 2007-ல் ‘கற்றது தமிழ்’, 2017-ல் ‘தரமணி’ கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இடைவெளியில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த சென்னையின் இரண்டு முக்கியமான பதிவுகளை திரைபடமாக்கினார் இயக்குநர் ராம். ‘கற்றது தமிழ்’ ஐடியின் ஆரம்ப நுழைவையும், அதன் நீட்சியாக 2017-ல் ஐடியின் வளர்ச்சியை ‘தரமணி’யிலும் பேசினார். தென் சென்னை, டைட்டில் பார்க், ஓஎம்ஆரைச் சுற்றி புற்றீசலாக வளர்ந்து நிற்கும் ஐடி கட்டிடங்கள் மற்றும் அந்த பகுதியின் வாழ்வியலையும் ‘தரமணி’ பேசியிருக்கும்.

மாநகரம்: முழுக்க முழுக்க சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், இந்த நகரத்தின் மீதான போலி பயத்தை நீக்க முயன்றது. எல்லா நகரங்களிலும் இருப்பதை போல இந்த நகரத்திலும், நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்த இப்படத்தில், இரவு நேர சென்னையின் அமைதியை உணர முடியும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் 2017-ல் வெளிவந்தது.

வட சென்னை: வட சென்னையின் மற்றொரு பதிவான இப்படம் கடற்கரையோர மீனவ மக்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டியிருக்கும். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான இந்தப் படம் 2018-ல் வெளியானது. எண்ணூர் துறைமுகம் அதைச்சுற்றியிருக்கும் பகுதிகள், உழைக்கும் மக்களின் வாழ்க்கை, அவர்களின் குடியிருப்புகளை இப்படம் பதிவு செய்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE