‘மகாராஜா’ வாய்ப்பை நழுவ விட்ட கதை! - நடிகர் சாந்தனு பகிர்ந்த பின்புலம்

By செய்திப்பிரிவு

சென்னை:‘மகாராஜா’ படத்தில் முதலில் சாந்தனு நடிக்க வேண்டியது என்று இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் கூறியிருந்த நிலையில், அந்த நேரத்தில் அந்தக் கதைக்கு தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க முன்வரவில்லை என்று சாந்தனு தெரிவித்துள்ளார்.

அண்மையில் பேட்டி ஒன்றி பேசிய இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், “‘மகாராஜா’ படத்தின் கதையை முதலில் சாந்தனுவிடம் சொல்லி இருந்தேன். அவர் இந்தக் கதையில் மிகவும் ஆர்வமாக இருந்தார். என்னை பல்வேறு தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் செல்வார். ஆனால், அவர்களுக்கு அந்தக் கதை செட் ஆகவில்லை. அப்புறம் அந்தக் கதையை வைத்துவிட்டு வேறு ஒரு கதையை எழுதினேன். அதுதான் ‘குரங்கு பொம்மை’” என்று கூறியிருந்தார்.

சாந்தனு ஏற்கெனவே ‘சுப்ரமணியபுரம்’, ‘பாய்ஸ்’, ‘காதல்’, ‘களவாணி’ உள்ளிட்ட படங்களில் முதலில் நடிக்க இருந்து பின்னர் அந்த வாய்ப்புகள் வேறு நடிகர்களிடம் சென்றது. அந்த படங்கள் அவற்றில் நடித்த நடிகர்களுக்கு நல்ல பெயரையும் வாங்கித் தந்தன. இதனைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் ‘மகாராஜா’ போன்ற ஒரு நல்ல படத்தை சாந்தனு தவறவிட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்து வந்தனர். மேலும் சிலர் பாக்யராஜின் தலையீட்டால்தான் சாந்தனுவுக்கு நல்ல பட வாய்ப்புகள் நழுவிச் செல்வதாகவும் விமர்சித்தனர். இதுகுறித்து சாந்தனு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தனது எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “முதலில் ‘மகாராஜா’ படத்துக்கு நிதிலன் உயிரூட்டியிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் உலகளாவிய அளவில் கவனம் பெற்று வருகிறார். அப்போதே நான் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறேன் என்ற நிறைவை இது எனக்கு தருகிறது.

இரண்டாவதாக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு அவர் கிரெடிட் கொடுத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் கதை நிராகரிக்கப்பட்டதற்கு எனக்கோ என் அப்பாவுக்கோ எந்த தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நித்திலன் என்னிடம் பேசியதே என் அப்பாவுக்கு தெரியாது. அந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க முன்வரவில்லை. ஆனால் இன்றைக்கு ‘கதைதான் ராஜா’ என்று நிரூபணம் ஆகியுள்ளது.

நான் எப்போதும் நல்ல கதைகளில் பணிபுரிவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எல்லாரும் சொல்வதைப் போல ‘காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்’” இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கிய ‘மகாராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஓடிடியில் வெளியாகி வடமாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. 1.8 கோடி பார்வைகளுடன் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE