ரகு தாத்தா Review: கீர்த்தி சுரேஷின் காமெடி + கருத்துக் களம் எடுபட்டதா?

By கலிலுல்லா

ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் எதிர்க்கும் பெண்ணின் வாழ்வில் நிகழும் சிக்கல்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது ‘ரகு தாத்தா’. ‘தி ஃபேமிலி மேன்’, ‘ஃபார்ஸி’ போன்ற தொடர்களில் எழுத்தாளராக பணியாற்றிய சுமன்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வள்ளுவன்பேட்டையைச் சேர்ந்த கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்) இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் களம் கண்டு சொந்த ஊரில் இருக்கும் சபாவை மூடுகிறார். மற்றொருபுறம், தான் எழுதும் சிறுகதைகளின் வழியே பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லாத கயல்விழி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் தாத்தாவின் இறுதி ஆசைக்காக சம்மதிக்கிறார். அதன்படி முற்போக்காக காட்டிக்கொள்ளும் தமிழ் செல்வன் (ரவீந்திர விஜய்) என்பவருடன் கயல்விழிக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், தமிழ் செல்வனுக்கு இன்னொரு முகம் இருப்பதை அறியும் கயல்விழி திருமணத்தை நிறுத்த போராடுகிறார். அவரின் போராட்டம் வென்றதா, இல்லையா என்பதே திரைக்கதை.

1960-களின் பின்னணியில் இந்தி திணிப்பு, அதற்கு எதிரான போராட்டங்கள், பெண்கள் மீதான அடக்குமுறை ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுமன் குமார். கதை நிகழும் களம், கதாபாத்திரங்கள் அறிமுகம், அவர்களின் வாழ்வியல் சூழல் என படத்தின் தொடக்கம் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் வசனங்களால் இழுக்கப்பட்டிருக்கிறது. கீர்த்தி சுரேஷ் திருமணம் வேண்டாம் என பிடிவாதம் பிடிப்பது போல இடைவேளை வரை படம் அதன் மையக்ககதைக்கு வருவேனா என அடம்பிடிக்கிறது. அதனாலேயே பிடிப்பில்லாத திரைக்கதை அயற்சியூட்டுகிறது. சீரியஸான காட்சியா அல்லது நகைச்சுவையா என்பதை உணர்வதே பெரும்பாடாக உள்ளது. இரண்டையும் கலந்துகட்டியிருப்பதால் போதிய தாக்கம் ஏற்படவில்லை.

இடைவேளைக்குப் பிறகு தான் இயக்குநர் கதையை எழுயிருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஜெயகாந்தன், பெரியார், இந்தி ஆதிக்க எதிர்ப்பு, அறிஞர் அண்ணா, புத்தக வாசிப்பு, பெண் அடிமைத்தனம் என நிறைய விஷயங்களைப் பேசும் படம், அதை அழுத்தமாக பதிய வைக்க தவறுகிறது. மொழி திணிப்பும், பெண்கள் மீதான அடக்குமுறையும் இன்றைய காலத்திலும் தொடர்வதால் எளிதாக கனெக்ட் செய்ய முடிகிறது.

மொத்த படத்திலும் கடைசி 1 மணி நேரம் சிறப்பான காட்சிகளால் எங்கேஜ் செய்கிறது. “திடீர்னு வந்தா திணிப்பு. காலங்காலமாக வந்தா கலாச்சாரம்” போன்ற வசனங்கள் அட்டகாசமாக எழுதப்பட்டுள்ளன. அதேபோல போலி பெண்ணியவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் இப்படம், ‘இந்தி திணிப்பு’ வேறு ‘இந்தி எதிர்ப்பு’ வேறு என்பதை பிரித்து காட்டுகிறது. க்ளைமாக்ஸில் நடக்கும் கலகலப்பான சம்பவங்களால் ஓரளவு முந்தைய குறைகளை மறக்க முடிகிறது. பெரிதாக கதையில் கவனம் செலுத்தாமல், நகைச்சுவையை முதன்மையாக கொண்டு நகர்த்திருப்பதால் சொல்ல வந்த விஷயத்தில் அழுத்தமில்லை.

அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக வெடிக்கும் கதாபாத்திரத்தில் தேவையான நடிப்பை மிகையின்றி பதிவு செய்கிறார் கீர்த்தி சுரேஷ். இறுதிக்காட்சியில் அவரது வசனங்களும், சுயமரியாதை சம்பவங்களும் கைதட்டல் பெறுகின்றன. இரு வேறு முகங்களையும், குணங்களையும் கொண்டிருக்கும் ரவீந்திர விஜய் ‘போலி பெண்ணியவாதி’யாக நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். சீரியஸுக்கும், நகைச்சுவைக்கும் இடையிலான மீட்டரில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பும், ஒன்லைனும் ரசிக்க வைக்கிறது. தேவ தர்ஷினி, இஸ்மத் பானு உள்ளிட்டோர் தேவையான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

நம்பகத்தன்மையை கூட்டும் கலை ஆக்கம் படத்துக்கு பலம். ஷான் ரோல்டனின் பின்னணி இசை உரிய தாக்கம் செலுத்தாமல் தனித்து பயணிக்கிறது. யாமினி யக்ஞமூர்த்தி நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறார். கதையிலிருந்து விலகிச்செல்லும் காட்சிகளில் டி.எஸ்.சுரேஷ் கறார் கட்டி வெட்டியிருக்கலாம். மொத்தமாக ரகு தாத்தா எடுத்துகொண்ட கதைக்களத்தை சீரியஸாக கொண்டு செல்வதா, நகைச்சுவையாக கொண்டு செல்வதா என்ற தடுமாற்றத்தில் கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டுமே ஸ்கோர் செய்து கவனம் பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE