தமிழின் முதல் ஆக்‌ஷன் ஹீரோ நடித்த தாய்நாடு!

By செய்திப்பிரிவு

மவுன படக் காலத்தில் மக்களுக்கு நன்றாகத் தெரிந்த புராணக் கதைகளையும் கர்ணப் பரம்பரைக் கதைகளையுமே படமாக்கி வந்தனர். கூடவே ஆக்‌ஷன் படங்களும் வந்தன. இதில் ஆக்‌ஷன் படங்களில் நடித்து, 1930-களில் புகழ்பெற்றவர்கள் இருவர். ஒருவர் ‘பாட்லிங் மணி’, இன்னொருவர் ‘ஸ்டன்ட் ராஜு’.

இந்தி சினிமாவின் சாகச நாயகன் 'ஜான் கவாஸ்', ஆக்‌ஷன் நாயகி நாடியா நடித்தபடங்கள் தமிழிலும் அப் போது வரவேற்பைப் பெற்றன. இதனால், நம்மூர் பாட்லிங் மணியை ஆக்‌ஷன் ஹிரோவாக்கி படங்களை இங்கே தயாரித்தார்கள். அப்படி உருவான படம், ‘மெட்ராஸ் மெயில்’. 1936-ல் வெளிவந்த இந்தப் படம்தான் தமிழில் முதல் சாகசப் படம். திரிவேதி இயக்கிய இந்தப் படத்தின் கதையையும் பாட்லிங் மணியே எழுதினார்.

இதையடுத்து, மிஸ் சுந்தரி, ‘ஹரிஜன சிங்கம்’ திரைப்படங்கள் பாட்லிங் மணி நடிப்பில் வெளிவந்தன. ஹரிஜன சிங்கம் படத்தை அவரே இயக்கினார். இந்தப் படங்களை அடுத்து அவர் நடித்த படம், ‘தாய்நாடு’ டி.எஸ்.மணி எழுதி, இயக்கினார். சித்ரகலா மூவி டோன் சார்பில் எஸ்.எம்.நாயகம் தயாரித்தார். முதல் சிங்களப் பேசும் படமான ‘கடவுனு பொறந்துவ’ படத்தைத் தயாரித்தவரும் இவரே. பாட்லிங் மணியுடன் எஸ்.டி.வில்லியம்ஸ், வி.பி. எஸ்.மணி, டி.கே.கிருஷ்ணையா, எம்.ஆர்.சுந்தரி, என்.சி.மீரா உட்பட பலர் நடித்தனர். என்.நாராயண ஐயர் இசை அமைத்த இந்தப் படத்தின் பாடல்களை டி.வி.நடராஜ சாமி எழுதினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படத்தில் தேசப் பக்தி கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE