திரை விமர்சனம்: வீராயி மக்கள்

By செய்திப்பிரிவு

தீயத்தூர் என்ற கிராமத்தில் வசிக்கும் ஐயனார் (சுரேஷ் நந்தா), தனது நண்பன் வீட்டுத் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க, பக்கத்துக் கிராமத்துக்குச் செல்கிறார். அங்கே நடுத்தர வயதுப் பெண்மணியான வடிவை (தீபா சங்கர்) சந்திக்கிறார். அவர் தன் அப்பா மருதமுத்துவின் (வேல.ராமமூர்த்தி) உடன் பிறந்த சகோதரி எனத் தெரிய வருகிறது. தனக்கொரு அத்தை இருப்பதை ஏன் மறைத்தார்கள் என்பதைக் கேட்க, அப்போது நான்கு பிள்ளைகளை ஆளாக்கிய வீராயி என்கிற கிராமத்து தாயின் வாழ்க்கைத் திரையில் விரிகிறது. தற்போது எந்த ஒட்டும் உறவும் இல்லாமல் வீராயியின் பிள்ளைகள் ஏன் சிதறிப் போனார்கள்? அவர்களை ஒன்றிணைக்க, ஐயனார் என்ன செய்கிறார், குடும்பங்கள் இணைந்ததா, இல்லையா? என்பது கதை.

ஒரே வீட்டுக்குள் வசிக்கும் பெற்றோர்களும் பிள்ளைகளும் தனித் தனி அறைகளில் முடங்கிக்கிடக்கும் ஸ்மார்ட் ஃபோன் யுகத்துக்கு உறவுகளின் மேன்மையை உணர்வு பொங்கச் சொல்லுகிறது படம். சித்தப்பா, அத்தை குடும்பங்களை விட்டு, அப்பா விலகி வாழ்வது ஏன் என்கிற புதிய தலைமுறை கிராமத்து இளைஞனின் தவிப்பும் குடும்பங்களுக்கு இடையிலான பிளவை சரி செய்ய முனையும் அவனது துடிப்பும் திரைக்கதையை விறுவிறுவென நகர்த்திச் செல்கின்றன.

வீராயி, தனியொரு மனுஷியாக வானம் பார்த்த பூமியில் போராடுவதும், அவருக்குத் தோள் கொடுக்க மூத்தமகன் மருது, தாயின் சுமையில் பாதியைத் தூக்கிச் சுமப்பதும் என்று புதுக்கோட்டையின் வறண்ட கிராமம் ஒன்றில் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்யும் ஓர் எளிய குடும்பத்தின் பிளாஷ்பேக் கதை இயல்பு குறையாமல் வந்து போகிறது.

ஒவ்வொரு பெண்ணும் சகோதரி, தாய், மாமியார் எனப் பல உறவு நிலைகளில் வாழ்நாள் முழுவதும் எவ்வாறு அன்பைப் பரப்பியபடி இருக்கிறார்கள் என்பதை வீராயி - அவருடைய மருமகள் சொர்ணம் கதாபாத்திரங்கள் வழியாகச் சொல்லி, பார்வையாளர்களின் நினைவுகளை அசைத்துப் பார்க்கிறார் இயக்குநர் நாகராஜ் கருப்பையா. அவருக்குத் துணையாக நின்று சிறந்த பாடல்களையும் கதையுடன் செல்லும் பின்னணி இசையையும் வழங்கியிருக்கும் தீபன் சக்கரவர்த்தி, தமிழ் சினிமாவுக்கு நல்வரவு.

வீராயியாக நடித்திருக்கும் பாண்டி அக்கா, அவரது மூத்த மகன் மருதுவாக வரும் வேல.ராமமூர்த்தி, மகள்வடிவாக வரும் தீபா சங்கர் தொடங்கி ஒவ்வொரு நடிகரும் மண்ணின் மனிதர்களாக வந்து போகிறார்கள்.

கட்டற்ற வன்முறை, பேயாட்டம், கொலை விசாரணை என சுற்றிச் சுற்றி வந்து பார்வையாளர்களைச் சோர்வுறச் செய்யும் தமிழ்த் திரையுலகின் தற்கால ‘ட்ரெண்’டில் மனதை வருடிச் செல்கிறார் இந்த வீராயி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE