“அரசியல் ஆசை வரலாம், வராமலும் இருக்கலாம்” - கீர்த்தி சுரேஷ் சூசகம்!

By கி.மகாராஜன் 


மதுரை: “இப்போதைக்கு அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை” என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ல் வெளியாகிறது. இதையொட்டி மதுரை தனியார் நட்சத்திர ஓட்டலில் ‘ரகு தாத்தா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: “மதுரை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். மதுரை நான் அடிக்கடி வந்துசெல்லும் ஊர். மல்லிகை பூ, மீனாட்சியம்மன் கோயில் என மதுரையில் எனக்கு ரொம்ப பிடித்தவை நிறைய உள்ளன.

‘ரகு தாத்தா’ படம் அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய படமாக இருக்கும். இப்படத்தில் இந்தி திணிப்பு பற்றி ஆங்காங்கே பேசப்பட்டிருக்கும். பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களை பற்றி நகைச்சுவையாக இந்த படத்தில் சொல்லி இருப்போம். ஜாலியாக பாப்கார்ன் சாப்பிட்டுகொண்டே பேமிலியோடு உட்கார்ந்து பார்க்கக்கூடிய படமாக இருக்கும். இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

பெண்ணியத்திற்காக போராடக்கூடிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். பெண்கள் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என பல்வேறு திணிப்புகள் செலுத்தப்படுகிறது.

கலாச்சாரம் என்ற பெயரில் சின்ன சின்ன விஷயங்கள் திணிக்கப்படுவதை படத்தில் காட்டியிருக்கிறோம். எதுவுமே சீரியஸாக இருக்காது, காமெடியாக சொல்லியிருப்போம். இது முழுக்க முழுக்க காமெடி படம் தான்.

நான் இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை. நடிப்பு மட்டும் தான். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் இருக்கலாம்.

இப்படத்தில் இந்தி திணிப்பை பேசுவதற்காக ஒரு பெண்ணை ஹீரோயினாக காட்டியுள்ளோம். பெண்களை பிரதானமாக வைத்து படம் எடுத்துள்ளோம். ஒரு ஆண் நடிகர் நடித்திருந்தால் கதையை எடுத்துச் சென்று இருக்க முடியாது.

இன்றுவரை இப்படி ஒரு படத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தி திணிப்பு என்பதை படமாக எடுத்திருக்க மாட்டார்கள். எனக்கு இந்தி தெரியும். இந்தியை திணிக்க கூடாது என்பதை சொல்லியுள்ளோம். மொழி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் திணிப்பு என்பது தவறானது.

மொழியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரி ஒரு படத்தை பற்றி பேச முடியும். நம் மக்கள் தான் இதை புரிந்து கொள்வார்கள் அதனால்தான் ‘ரகு தாத்தா’ என பெயர் வைத்துள்ளோம். மொத்தத்தில் இப்படம் பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இருக்கும்.

எல்லா துறையிலும் பிரச்சினை உள்ளது. சினிமா என்பதால் அவை உடனே வெளியே தெரிகிறது. ஆகஸ்ட் 15-ல் நிறைய படங்கள் வருகின்றன. அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும்” இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE