திரை விமர்சனம்: அந்தகன்

By செய்திப்பிரிவு

சிறந்த பியானோ கலைஞரான கிரிஷ் (பிரசாந்த்), பார்வையற்றவரைப் போல காட்டிக்கொள்கிறார். அவருக்கு லண்டன் சென்று சிறந்த இசைக் கலைஞராக வேண்டும் என்பது கனவு. அதற்குப் பணம் சேர்க்க, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவர் இசையில் மயங்கும் நடிகர் கார்த்திக், தன் மனைவி சிம்மியை (சிம்ரன்) மகிழ்விக்க, வீட்டுக்கு அழைக்கிறார். பார்வையற்றவராக அங்கு செல்லும் கிரிஷ், ஒரு கொலைக்குச் சாட்சியாகிவிட, பிறகு அவருக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன, லண்டன் கனவு நிறைவேறியதா என்பது ‘அந்தகன்’ கதை.

இந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக் இது. அதன் மூலக் கதையையும், காட்சி அமைப்புகளையும் பெரும்பாலும் மாற்றாமல் இயக்கியிருக்கிறார் தியாகராஜன். ஒரு கொலைக்குப் பார்வையற்றவர் சாட்சியாவது என்பது சவாலான கதை. அதிலும் பார்வையற்றவராக சக பாத்திரங்களுக்கு மட்டும் நடிப்பது இன்னும் பெரிய சவால்.

அதற்கேற்ப திரைக்கதையைத் தியாகராஜனும் பட்டுக்கோட்டை பிரபாகரனும் வடிவமைத்திருக்கிறார்கள். தொடக்கத்தில் படம் மெதுவாக நகர்கிறது என்றாலும், அந்தக் கொலைக்குப் பிறகு கதை சூடுபிடிக்கிறது. அடுத்தடுத்த காட்சிகளும் திருப்பங்களுக்கும் திரைக்கதைக்கு வலு சேர்க்கின்றன. கார்த்திக் வரும் காட்சிகளில் அவருடைய பழைய பாடல்கள் பின்னணியில் ஒலித்து, மலரும் நினைவுகளைக் கிளறி விடுகின்றன.

ஆனால், பிரபலமான நடிகர் கொலை செய்யப்படுகிறார் என்றால், அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்குத் திரைக்கதையில் விடை இல்லை. ஒரு பெரிய நடிகரின் மனைவிக்கும் காவல் அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதற்கு நியாயமான காட்சியும் இல்லை. உண்மைத் தெரிந்தவரை கொலை செய்யும் ஒருவர், நாயகனை மட்டும் விட்டுவிடுவதும், பிறகு அவரே ‘கிரிஷ்க்கு கண் இல்லை, வாய் இருக்கு’ என்று வசனம் பேசுவதும் முரண்.

இடைவேளைக்குப் பிறகு துரோகம் செய்பவரைத் திரும்பத் திரும்ப நம்புவது, உதவி செய்து கழுத்தறுப்பவர்களை நம்புவதுபோன்ற காட்சிகள், ரோலர் கோஸ்டரில் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக கிட்னி திருடர்கள் உதவுவது, மனிதாபிமானமாகப் பேசுவது போன்றவை ஒட்டவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசாந்துக்கு இது நல்ல ‘கம்பேக்’ படம். இசைக் கலைஞராகவும் பார்வையற்றவராக நடிக்கும் காட்சிகளிலும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். பயப்படுவது, ஆற்றாமையால் அல்லாடுவது என மெனக்கெட்டிருக்கிறார். சிம்ரன் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ‘பார்த்தேன் ரசித்தேன்’ ஞாபகத்தை ஏற்படுத்துகிறார். நாயகி ப்ரியா ஆனந்துக்குப் பாந்தமான கேரக்டர்.

கார்த்திக், நடிகராகவே வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். ஊர்வசி, யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், மனோபாலா என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் கடைசிப் பாடல் மனதில் நிற்கிறது. பின்னணி இசையில் குறையில்லை. ரவி யாதவின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது. சந்தோஷ் சூரியாவின் படத்தொகுப்பு பக்கபலம். சில குறைகள் படத்தில் இருந்தாலும், ‘அந்தகனை’ ரசிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE