பள்ளிப்பட்டு அருகே பூர்விக கிராமத்தில் பாடகர் எஸ்பிபி உருவச் சிலை திறப்பு 

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அருகே திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பூர்வீக கிராமத்தில் அவரது திருவுருவச் சிலையை வெள்ளிக்கிழமை குடும்பத்தினர் திறந்து வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ளது கோணேட்டம் பேட்டை. இக்கிராமம், மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குடும்பத்தின் பூர்வீக கிராமமாகும். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தன் சிறார் பருவத்தின் கணிசமான பகுதியை கழித்த இக்கிராமத்தில் தான், அவரது குடும்பத்தினரின் பூர்வீக வீடு உள்ளது. அந்த வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவுகளை போற்றும் வகையில், அவரது சிலையை அமைக்கும் பணி சமீப காலமாக குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அப்பணிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 4 அடி உயரம் கொண்ட மார்பளவு பால்நிற கற்சிலை திறப்பு விழா எளிமையான முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்திரி, தங்கை திரைப்பட பின்னணி பாடகி எஸ்.பி. சைலஜா, அவரது கணவர் சுதாகர், உறவினர் பானுமூர்த்தி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் பங்கேற்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE