திரை விமர்சனம்: மழை பிடிக்காத மனிதன்

By செய்திப்பிரிவு

அமைச்சரின் (ஏ.எல்.அழகப்பன்) மகனை கொன்றுவிடும் சலீமை (விஜய் ஆண்டனி) அழிக்க எதிரிகள் முயற்சிக்கிறார்கள். அவரைக் காப்பாற்றும் ரகசிய உளவு அதிகாரி (சரத்குமார்), அவர் அடையாளத்தை மறைத்து அந்தமானில் உள்ள தீவில் விட்டுச்செல்கிறார். என்றாலும் சலீமை கொல்ல எதிரிகள் தேடி அலைகிறார்கள். அந்தமானில் சலீமுக்கு சவும்யா (மேகா ஆகாஷ்), பர்மா (பிருத்வி அம்பார்) ஆகியோரின் நட்பு கிடைக்கிறது. இவர்கள் இருவருக்கும் உள்ளூரில் உள்ள அடாவடி பேர்வழியான டாலியுடன் (தனஞ்செயா) பகை. இவர்கள் பிரச்சினையைத் தீர்க்க சலீம் என்ன செய்கிறார் என்பது கதை.

அடையாளத்தை மறைத்து வாழும் நாயகன், ஆக்ரோஷமாகப் பழைய அவதாரம் எடுக்கும் கதைக் களங்களைப் பலமுறை பார்த்தாகிவிட்டது. இதுவும் அதுபோன்ற கதைக் களம்தான். அதற்காக அந்தமானை தேர்ந்தெடுத்து படமாக்கியிருக்கும் விதத்துக்கு இயக்குநர் விஜய் மில்டனை பாராட்டலாம். தான் என்கிற அகம்பாவத்துடன் வாழும் ஒரு கதாபாத்திரத்தை டான் போல வில்லனாகக் காட்டியிருப்பதும் ரசிக்க வைக்கிறது.

விஜய் ஆண்டனியை அந்தமானில் சரத்குமார் விட்டுச் செல்லும் காட்சியின் பின்னணியில் பெரிய சம்பவங்கள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால், அங்கு புதிய கதையாக விரிந்து திரைக்கதை அதை நோக்கியே சுற்றுகிறது. இதனால்,விஜய் ஆண்டனி யார்?, என்னப் பிரச்சினை,அவர் அடையாளத்தைக் காட்டுவதால் ஏற்படும் விபரீதங்கள் என்ன என்பது போன்ற கேள்விகள் மண்டையைச் சூடேற்றுகின்றன.

இதுபோன்ற படங்களில் நாயகனின் காட்சிகள், ஃபிளாஷ்பேக்கில் விரிந்து பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விடையைச் சொல்லும். ஆனால், இதில் அந்தக் காட்சிகள் மிஸ்ஸிங். தலைப்புக்கு ஏற்ற நியாயமான காட்சிகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் இயக்குநர் மேலும் கவனம் காட்டி இருக்கலாம். திருப்பங்கள் எதுவும் இல்லாமல் நகரும் காட்சிகளும் சோர்வடைய செய்துவிடுகின்றன. நாயகனின் நீண்ட அறிவுரைக்குப் பிறகு வில்லன் திருந்தும் காட்சியை இன்னும் எத்தனைப் படத்தில் பார்ப்பதோ?

சலீம் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி தன் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். சரத்குமார் கதாபாத்திரத்துக்குப் போதுமான காட்சிகளை வைத்திருக்கலாம். மேகா ஆகாஷ் நிதானமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லன் தனஞ்செயா கவனிக்க வைக்கிறார். போலீஸ் அதிகாரி முரளி சர்மா அலட்டிக் கொள்ளாமல் நடித்துள்ளார். துருதுருவென சுற்றும் கதாபாத்திரத்தில் பிருத்வி அம்பார் கவர்கிறார். கவுரவத் தோற்றத்தில் வரும் சத்யராஜ் போனில் பேசிக்கொண்டே இருக்கிறார். சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் ரமணா, ஏ.எல்.அழகப்பன், தலைவாசல் விஜய் போன்றோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

அச்சு ராஜாமணி, விஜய் ஆண்டனியின் இசை பெரிதாக ஈர்க்கவில்லை. விஜய் மில்டனின் கேமரா அந்தமானை புதிய கோணத்தில் அழகாகக் காட்டியிருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், காட்சிகளைத் தொகுப்பதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். திரைக்கதையைக் கச்சிதமாக மெருகேற்றியிருந்தால் ‘மழை பிடிக்காத மனித’னை எல்லோருக்கும் பிடித்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE