ஆஸ்கர் நூலகத்துக்கு தனுஷின் ‘ராயன்’ பட திரைக்கதை தேர்வு! - சன் பிக்சர்ஸ் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் திரைக்கதை அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்துக்கு தேர்வாகியுள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

தனுஷின் 50-வது படமான இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா இதில் வில்லனாக நடித்துள்ளார்.

படம் கடந்த ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூலில் ரூ.90 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘ராயன்’ படத்தின் திரைக்கதை அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்துக்கு தேர்வாகியுள்ளது என தயாரிப்பு நிறுனவமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. முன்னதாக ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதையும் இந்த நூலக்கத்துக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது. ‘ராயன்’ திரைக்கதை தேர்வுக்கு தனுஷ் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE