தனுஷுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை மிக தவறானது: தயாரிப்பாளர் சங்கத்துக்கு கார்த்தி கண்டனம் 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நடிகர் கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் “நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தீர்மானங்களுக்கு நடிகர் கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இதுகுறித்து செய்தியாளர்களிடம் கார்த்தி பேசியதாவது: “திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் நல்ல உடன்பாட்டுடன் தொடர்ந்து நல்ல முறையில் பணியாற்றி வருகிறோம். நடிகர்கள் சார்ந்த பிரச்சினைகளும், தயாரிப்பாளர்கள் சார்ந்த பிரச்சினைகளும் இருதரப்பும் கலந்து பேசி குழுக்கள் அமைத்துதான் நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் தயாரிப்பாளர் சங்கம் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். புகார் மற்றும் வேலைநிறுத்தம் தொடர்பாக அவர்களாகவே ஒரு முடிவை எடுத்துள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.

தனுஷ் தொடர்பாக இதுவரை எங்களுக்கு எழுத்துபூர்வமாக எந்தவொரு புகாரும் வராத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று அவர்கள் கூறியிருப்பது மிக தவறானது. அதேபோல படப்பிடிப்பை நிறுத்தப் போவதாக அவர்கள் கூறியிருப்பது என்பது பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய விஷயம். அதை எப்படி அவர்களே முடிவெடுக்க முடியும் என்று தெரியவில்லை” இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

வாசிக்க > ஓடிடி ரிலீஸ் முதல் நடிகர் தனுஷுக்கு நிபந்தனை வரை: தயாரிப்பாளர் சங்க தீர்மானங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE