செயற்கைக் குரலில் ஓர் இசை ஆல்பம்! - மதன் கார்க்கியின் ‘முடிவிலி’ முயற்சி

By செ. ஏக்நாத்ராஜ்

சூப்பர்ஹிட் பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கும் மதன் கார்க்கி, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உட்பட பல படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். அடுத்தும் சில பிரம்மாண்ட படங்களில் பணியாற்றி வரும் இவர், 'முடிவிலி' என்ற இசை ஆல்பத்தை எழுதி, இசை அமைத்து உருவாக்கி இருக்கிறார். இணையத்தில் நாளை வெளியாகும் இந்த ஆல்பம் பற்றி பேசினோம்.

இசை அமைப்பாளரா மாறியிருக்கீங்க..?

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால, நான் முதன் முதலா பாடல் எழுதி, பாடி, இணையத்துல கிடைச்ச டூல் மூலமா இசை அமைக்க முயற்சிபண்ணினேன். டியூன் செட்டாச்சு. அதன் மூலமா பாடல் உருவாக்கிக் கேட்டுப் பார்த்தேன். இசை,சுத்தமா எனக்குப் பிடிக்கலை. என் குரலும் சரியாஇல்லை. ஆனா பாடல் வரிகள் நல்லா இருந்தது.அதனால பாடல் எழுதறதை தொடரலாம்னு அப்போதான் முடிவு பண்ணினேன். அங்கிருந்துதான் பாடலாசிரியர் பணி தொடங்குச்சு. ஆனாலும் இப்ப ட்யூனுக்கு எழுதாத பாடல்களுக்கு, எனக்குள்ள நானே சுயமா இசையை யோசிச்சுதான் எழுதறேன். அதானால இசை எனக்குள்ள இருக்கு. இப்ப சுயாதீன இசை அமைப்பாளர்களோட பணியாற்றி வர்றேன். அப்ப புதுசா வந்திருக்கிற டெக்னாலஜி பற்றி தெரிஞ்சுகிட்டேன். அதை வச்சு நான் எழுதிய பாடல்களை வச்சு, இசை அமைச்சு ‘முடிவிலி’ங்கற இசைத் தொகுப்பை உருவாக்கி இருக்கேன். நான் புதுசா ஆரம்பிச்சிருக்கிற, ‘பா மியூசிக்’ மூலம் இதை வெளியிடறேன்.

ஆல்பத்துல எதை பற்றிய பாடல்கள் இருக்கு?

10 பாடல்கள். எல்லாமே காதலின் வெவ்வேறு நிலைகளையும் கோணங்களையும் பாடுற பாடல்களா இருக்கும். தமிழ் மொழியோட அழகியலை இணைக்கும் விதமாகவும் இருக்கும். காதல் தோன்றும் நிலை, காமம் உணரும் நிலை, இல்லற வாழ்வின் காதல், காதலைப் பிரியும் வலி, ஒருவழி ஒருபால் காதல், நரைகளோடு பிறக்கும் அனுபவ காதல்,எல்லா உறவுகளையும் வேண்டாம்னு சொல்லிட்டு ஒரு பெண் தனது கனவுகள் பற்றி பாடி போகிற பாடல்னு ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமா இருக்கும். போர்த்துகீசிய கிராமிய இசை, கொரியன் பாப் இசை வகைகள்ல இந்தப் பாடல்களை உருவாக்கி இருக்கேன்.

இதுல செயற்கைக் குரலை பயன்படுத்தி இருக்கீங்களாமே?

ஆமா. புதுசா பண்ணியிருக்கோம். ஏ.ஐ. டெக்னாலஜியில யாராவது ஒரு பாடகர் பாடினதை வேறொரு குரலுக்கு மாற்ற முடியும். ‘தி கோட்’ படத்துல பவதாரிணி குரல்ல உருவான பாடல் அப்படித்தான். இப்ப ஏ.ஐ.யின் அடுத்த கட்டம் வந்திருச்சு. இதுக்கு யார் குரலும் தேவையில்லை. நாமளே டூல்ஸ் பயன்படுத்தி புதுகுரலைஉருவாக்க முடியும். இதுக்கு ‘செய்குரல்’னு பேர்வச்சிருக்கேன். செய்த குரல், செய்யப்பட்ட குரல்னுஅர்த்தம். பாடலோட ‘இந்த இடத்துல பேஸ் அதிகமா வேணும், இங்க வாய்ஸை குறைக்கணும், ஏத்தணும்’னு எல்லா விஷயங்களையும் புரோக்கிராம் பண்ணி உருவாக்கிய பாடல்கள் இது.இதன் மூலமா பாட்டுக்கு ஏற்றமாதிரி வாய்ஸைமாத்திக்க முடியும். புதுசா உருவாக்கப்பட்ட இந்த ஆண், பெண் செய்குரல்களுக்கு ஐலா, எம்.வி.எஸ் -னு பேர் வச்சிருக்கேன்.

இது புதுசா இருக்கே?

இது ஒரு வளர்ச்சி. இப்ப ஒரு பாடகி இருக்காங்க. அதுல அவங்க திறமையானவங்களா இருக்காங்க. ஆனா, அவங்களுக்கு பாடல் எழுததெரியாது, இசை அமைக்கத் தெரியாது. அவங்களுக்கு தன்னை வெளிப்படுத்தணும்னு ஆசை இருக்கு. அப்ப, பாடல் வரிகளை செயற்கை நுண்ணறிவான ‘சாட் ஜிபிடி’ டூல்ல ‘ஜெனரேட்’ பண்ணிட்டு, டூல்ஸ் பயன்படுத்தி டியூன் உருவாக்கி பாடலை உருவாக்க முடியும். இதுமாதிரிதான் இனி நிறைய முயற்சிகள் நடக்கும்னு நினைக்கிறேன்.

ஜிபிடி-யில பாடல் வரிகளை ‘ஜெனரேட்’ பண்ண முடியுமா?

முடியும். என்னன்னா, இதுக்கு முன்னால பண்ணியிருக்கிறவங்களோட ஸ்டைல்லதான் அது பாடல் வரிகளைக் கொடுக்கும். புதுசா கொடுக்காது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தால பண்ண முடியாத மாதிரியான வரிகளை எழுதி, நான் அதுல ‘இன்புட்’டா கொடுத்தா, உடனே ஏ.ஐ-யும் அதே ஸ்டைல்ல பாடல்களை கொடுக்கும். அதனால, மெஷினால பண்ண முடியாததை தங்களால பண்ண முடியும்ங்கற திறமையோட இருக்கிறவங்க தான், இந்த துறையில நீடிக்க முடியும். அதுக்கு அப்டேட்ல இருந்துட்டே இருக்கணும்.

அப்படின்னா யாருமே இனி ராயல்டி கேட்க முடியாதே?

ஆமா. ஜிபிடி-கிட்ட எனக்கொரு கதை கொடுன்னு கேட்டா, அது ஒரு கதை கொடுக்கும். அது மாதிரி பல முறை கேட்டா ஒரே மாதிரியான கதையைத்தான் மாற்றி மாற்றிக் கொடுக்கும். அதே ஜிபிடி-கிட்ட ஒரு சிங்கத்தைப் பற்றியும் மானைப் பற்றியும் கதை கொடுன்னு கேட்டா, வழக்கமானதா இல்லாம அதுபற்றி வேறொரு கதையை கொடுக்கும். தன்னம்பிக்கையை இழந்த சிங்கத்துக்கும் புத்திசாலியான ஒரு மானுக்கும் இடையில நடக்கிற கதை கொடுன்னு கேட்டா, அந்தக் கதையை இன்னும் சுவாரஸ்யமா கொடுக்கலாம். எவ்வளவுக்கு எவ்வளவு நாம ‘இன்புட்’ கொடுக்கிறோமா, அதுக்கு தகுந்த மாதிரிஅதுல இருந்து நிறைய விஷயங்களை எடுக்கமுடியும். அதனால பாடல் வரிகளுக்கு காப்புரிமையை கேட்க முடியும். ஆனா, மற்றதுக்கு முடியாது. அதே போல இனிமே கேள்வி கேட்க தெரிஞ்சாதான் எதிர்காலம் இருக்கு.

சினிமாவுக்கு இசை அமைக்கிற எண்ணம் இருக்கா?

இல்லை. என்ஆசைக்காக இப்படியொரு முயற்சி பண்ணியிருக்கேன். சினிமாவுக்கு பெரிய உழைப்பும் நேரமும் தேவை. அந்த எண்ணம் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்