“இவரை ஏன் தேர்வு செய்தீர்கள் என்ற விமர்சனம் என்னை மிகவும் பாதித்தது” -  கதீஜா ரஹ்மான்

By செய்திப்பிரிவு

சென்னை: “நான் தான் இசையமைப்பாளர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். அப்போது நிறைய ட்வீட்களை பார்த்தேன். திறமையான பலர் இருந்தும் இவரை ஏன் தேர்வு செய்தீர்கள் என எழுதியிருந்தார்கள். அது என்னை மிகவும் பாதித்தது” என ஏ.ஆர்.ரஹ்மானின் மகளும், இசையமைப்பாளருமான கதீஜா ரஹ்மான் பேசியுள்ளார்.

ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ‘மின்மினி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய படத்தின் இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான், “இந்தப் படத்துக்காக இயக்குநர் ஹலிதா ஷமீம் என்னை சந்தித்த போது நான் தயாராக இல்லை. பின்னர் அவர், ‘இந்தப் படத்தில் உங்களுடன் தான் நான் பணியாற்றுவேன்’ என கட்டாயமாக சொல்லிவிட்டார். நீங்கள் ஒப்புக்கொண்டால் நான் உங்களுக்கு முழு ஆதரவையும் தருகிறேன் எனக் கூறி, முழு ஒத்துழைப்பையும் கொடுத்து, மிகவும் உதவிகரமாக இருந்தார்.

முதலில் அவர் ட்ரெய்லர் கட் தான் கொடுத்தார். பண்ண முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. என் கணவர், ‘கண்டிப்பாக விட்டு விடாதே’ என கூறி நம்பிக்கை அளித்தார். ஸ்டூடியோவில் உள்ளவர்களும் ஊக்குவித்தனர். இயக்குநரிடம் நான் அடிக்கடி கேட்ட கேள்வி என்னை எப்படி நம்பி கொடுத்தீர்கள் என்பது தான். நிறைய தடைகள் இருந்தது. அதையெல்லாம் கடந்து வந்தேன்.

ஒரு கட்டத்தில் நான் தான் இசையமைப்பாளர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். அப்போது நிறைய ட்வீட்களை பார்த்தேன். திறமையான பலர் இருந்தும் இவரை ஏன் தேர்வு செய்தீர்கள் என எழுதியிருந்தார்கள். அது என்னை மிகவும் பாதித்தது. நம் இயக்குநருக்கு நாம் பெருமை சேர்த்து கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். காரணம் அவர் என்னை முழுமையாக நம்பினார். உங்களுக்கு பிடித்தால் ஆதரவு கொடுங்கள். பிடிக்கவில்லை என்றால் சமூக வலைதளங்களில் மோசமாக திட்டாதீர்கள். இதற்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன்” என்றார். இந்தப் படத்தின் மூலம் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE