டி.ஜி.லிங்கப்பா இசை அமைப்பாளரான ‘மோகன சுந்தரம்’!

By செய்திப்பிரிவு

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துப்பறியும் கதைகளுக்குத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. இக்கதைகள் அதிகம் வாசிக்கப்பட்டன. இதுபோன்ற கதைகளை எழுதியவர்களில் வடூவூர் கே.துரைசாமி அய்யங்கார் நட்சத்திர எழுத்தாளராக விளங்கினார்.

அடுத்து, ஜே.ஆர்.ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி அம்மாள் பிரபலமாக இருந்தனர். வடூவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய, மேனகா,திகம்பர சாமியார், மைனர்ராஜாமணி, பாலாமணி, வித்யாபதி போன்ற நாவல்கள் திரைப்படமாகின. கோதைநாயகி அம்மாளின் நாவல்களில் சிலவும் திரைப்படமாகி இருக்கின்றன. இவர்களை அடுத்து இந்தலிஸ்ட்டில், பாளையங்கோட்டையில் பிறந்த ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு என்ற ஜே.ஆர்.ரங்கராஜும் இணைந்தார்.

இவர் எழுதிய இராஜாம்பாள், சந்திரகாந்தா நாவல்கள் திரைப்படங்களாகின. இவருடைய நாவல்களில் வரும் துப்பறியும் கோவிந்தன், சவுக்கடி சந்திரகாந்தா எனும்கதாபாத்திரங்கள் அப்போது புகழ் பெற்றிருந்தன. திரைப்படமான இவரது இன்னொரு நாவல், ‘மோகன சுந்தரம்'.

இதை ஏ.டி.கிருஷ்ணசாமி இயக்கினார். ‘ஏடிகே’ என்றழைக்கப்படும் இவர், சபாபதி, மனம் ஒரு குரங்கு, அறிவாளி உட்பட பல படங்களை இயக்கியவர்.

‘மோகன சுந்தரம்’ படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் நாயகனாக நடித்தார். படத்தைத் தனது ஸ்ரீ சுகுமார் புரொடக் ஷன்ஸ் சார்பில் அவரே தயாரித்தார். எஸ்.வரலட்சுமி நாயகி. இருவரும் நன்றாகப் பாடுவார்கள் என்பதால் இந்த ஜோடிக்கு அப்போது வரவேற்பு இருந்தது. பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன், சந்திரபாபு, கே.சாய்ராம், வி.கே.கார்த்திகேயன், வி.சுசீலா, கே.எஸ்.அங்கமுத்து, ஜி.சகுந்தலா உட்பட பலர் நடித்தனர்.

தனியார் வங்கியில் ஒரு கொலையும் கொள்ளையும் நடக்கிறது. கொல்லப்பட்டவர் வங்கியின் பங்குதாரர்களில் ஒருவரான சுந்தரம் (பந்துலு) என்று கூறப்படுகிறது. அமெச்சூர் துப்பறியும் நிபுணரான கோவிந்தன், ('ஜெயக்கொடி' நடராஜன்) எப்படித் துப்பறிந்து உண்மையை வெளி கொண்டு வருகிறார் என்பது கதை.

டி.ஜி.லிங்கப்பா இசை அமைத்த முதல் படம் இது.இவரும் டி.ஆர்.மகாலிங்கமும் நண்பர்கள் என்பதால்,பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் பணியாற்றிக் கொண்டிருந்த லிங்கப்பாவை இதில் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் டி.ஆர்.மகாலிங்கம். பாடல்களை கே.டி.சந்தானம் எழுதினார்.

‘ஓ ஜகமதில் இன்பம்’, ‘பாட்டு வேணுமா ஒரு பாட்டு வேணுமா’, ‘புள்ளிமானைப் போல வந்து’, ‘கண்ணீர் தானோ என் வாழ்நாளில்’, ‘அவர்தானே என் ஆருயிர்’, ‘வெண்முகில் காணா தோகை போல’, ‘இன்பம் கொஞ்சும் வேளை’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

‘இன்பம் கொஞ்சும் வேளை’ பாடலில் சந்திரபாபு ஆங்கிலம் கலந்து பாடும் ‘ஹலோ மை டியர் டார்லிங்...’ பாடல், ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலுக்கு முன்னோடி.

1951-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம், சுவாரஸியமான கதைக்களம் இருந்தும் சராசரி வெற்றியை மட்டுமே பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE