“கெட்டதை அழிக்கிறதுதான் முக்கியம்!” - விஜய் ஆண்டனி பேட்டி

By செ. ஏக்நாத்ராஜ்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், சரத்குமார், கன்னட நடிகர் டாலி தனஞ்செயா என பெரும் நட்சத்திரப் பட்டாளம். சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லர் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் விஜய் ஆண்டனியிடம் பேசினோம்.

‘மழை பிடிக்காத மனிதன்’ தலைப்பே கவிதையா இருக்குதே?

ஆமா. ஹீரோ வாழ்க்கையில் ஒருமரணம் நடக்கறதுக்கு மழையும் காரணமா அமையுது. அதனால அவருக்கு மழைன்னாலே பிடிக்காமப் போயிடுது. மழையே பிடிக்காத மனுஷனுக்கு வேற என்ன பிடிக்கும்? அதனால, எந்த உறவும் வேண்டாம்னு எல்லாத்துல இருந்தும் ஒதுங்கி இருக்குறான். அவன் கண்ணு முன்னால சில விஷயங்கள் நடக்குது. அதுக்கு அவன் எப்படி ரியாக்ட் பண்றான்? அது அவனை எப்படி மாத்துதுங்கறது தான் படம். மனிதநேயத்தோட முக்கியத்துவத்தை, படத்தின் கதை சொல்லும்.

படத்துல முதல் 40 நிமிடம் உங்களுக்கு வசனமே இல்லையாமே?

கதைப்படி அப்படித்தான். ‘எக்ஸ்பிரஷன்களை’ மட்டும் கொடுத்துட்டு இருப்பேன். யாருமே வேண்டாம், எந்தப் பிரச்சினையும் வேண்டாம்னு மறைஞ்சு வாழவேண்டிய சூழல், நாயகனுக்கு வருது. “இந்த ஊர்ல நீ வாழ்ந்துக்கோ, இங்கயாரையும் உனக்கு தெரியாது. வாழ்க்கையை புதுசா தொடங்கு’ன்னு அவனைஅந்தமான்ல ஒரு டீம் இறக்கிவிட்டுட்டு போறாங்க. அவன் ஒரு நாயை பார்க்கிறான். அது கால் ஒடிந்த நாய். அது மூலமா அவனுக்கு சில தொடர்புகள் கிடைக்குது. அங்க இருந்து கதை தொடங்கும். பிறகுஅவன் பேசத் தொடங்குவான். அதுஎன்ன மாதிரியான விளைவை ஏற்படுத்துதுங்கறது படம்.

விஜயகாந்த் நடிக்க இருந்த கேரக்டர்ல சத்யராஜ் நடிச்சிருக்காரே…

ஆமா. விஜயகாந்துக்காக இயக்குநர் விஜய்மில்டன் ஒரு வருஷம் காத்திருந்தார். உடல் நிலை சரியில்லாம இருந்ததால, விஜயகாந்த் மேல லைட் படக்கூடாதுன்னு சொன்னாங்க. அதனால வெளிச்சமான இடத்துல 2 மணி நேரத்துல சில காட்சிகளை வேகவேகமாக எடுத்திடலாம்னும் பேசினாங்க. ஆனா, அதுக்கும் வழியில்லாம போச்சு. பாஸ் மாதிரியான கேரக்டர்அது. அதுல சத்யராஜ் சார் பண்ணியிருக்கார். அவர், லுக்கே அருமையா இருக்கும்.

படம் முழுவதும் மழை வருமா?

மழையும் ஒரு கேரக்டர் மாதிரிதான். அடிக்கடி வரும். மழை வரும்போதெல்லாம் ஹீரோவுக்கு பிரச்சினையும் வரும். மழையே பிடிக்காத ஹீரோ, ஒரு கட்டத்துல அதை ஏத்துக்கிட்டு அதுக்குள்ள இறங்குறார். பொதுவா வாழ்க்கையில மழைங்கறது தவிர்க்கவே முடியாம திடீர்னுவந்து நிற்கும். அப்போ ஒரு மனிதன் என்ன பண்ணுவான்? இந்த மழையை, பிரச்சினைகளின் குறியீடாகவும் பார்க்கலாம். பிரச்சினைகளைத் தவிர்க்கத்தான் எல்லோரும் பார்ப்பாங்க. தவிர்க்கவே முடியலைன்னா என்ன பண்ண முடியும்?

மெசேஜ் ஏதும் சொல்லியிருக்கீங்களா?

எல்லா படத்துலயும் கெட்டவனை ஹீரோ கொல்வது மாதிரிதான் கதை இருக்கும். ஆனா, அந்த கெட்டவன், யாரோ ஒருத்தருக்கு நல்லவனாவும் இருப்பான். மனைவிக்கு, குழந்தைகளுக்கு, வேண்டியவங்களுக்குன்னு அவன் நல்லவனாகத்தான் இருக்கிறான். அதனால இவன் கெட்டவன், அவன் நல்லவன்னு யாரையும் சொல்ல முடியாது. இதுலஇயக்குநர் சொல்ல வர்ற விஷயம் என்னன்னா, ‘கெட்டவனை இல்லை, கெட்டதைஅழிக்கிறதுதான் முக்கியம்’ என்பதுதான்.

சரத்குமார் நெகட்டிவ் கேரக்டர்ல வர்றாரா?

கதைப்படி அவரால ஒரு பிரச்சினை இருக்கு. அவர் என் பக்கம் நிற்கிறவரா? வேற பக்கம் இருக்கிறவரா அப்படிங்கறது படம் பார்த்தாதான் தெரியும். மேகா ஆகாஷும் நல்லா நடிச்சிருக்காங்க. கூடவே டாலி தனஞ்செயா, பிருத்வி அம்பர், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மான்னு நிறைய நடிகர்கள் இருக்காங்க.

விஜய்மில்டனின் ‘கோலிசோடா’ல நீங்க நடிக்கறதா இருந்ததே?

ஆமா. அவர் முதல்ல அதுக்கு,‘கோயம்பேடு’ன்னு தலைப்பு வச்சிருந்தார். அதுல நான் நடிக்கிறேன்னு சொன்னேன். அப்ப அது நடக்கலை. பிறகு ‘பிச்சைக்காரன்’ பண்ணும்போது, இந்தக் கதையை சொன்னார். அது மாஸான கதையா, பிரம்மாண்டமா இருந்தது. நான்அப்பதான் வளர்ந்து வர்ற நேரம். அதனால,பண்ண முடியலை. இப்ப சரியா அமைஞ்சது. அந்தக் கதைக்கு சரியா பொருந்துவேன்னு தெரிஞ்சதும் ஓகே சொல்லிட்டேன்.

இசை அமைப்பாளரா ஏன் திடீர் இடைவெளி?

கொஞ்சம் இடைவெளி விழுந்திரிச்சு. ‘லைவ் கான்சர்ட்’டுக்காக ஒவ்வொரு இடத்துக்கும் போகும்போதுதான் ரசிகர்கள் பாடல்களை எவ்வளவு கொண்டாடறாங்க, விரும்புறாங்கன்னு தெரியது. அதனால அடுத்த வருஷத்துல இருந்து நான்நடிக்கும் படங்களுக்கு இசை அமைக்கிறேன். நான் நடிக்காத படங்களுக்கும் இசை அமைக்கப் போறேன்.

இப்ப ஏ.ஐ தொழில்நுட்பத்துல பாடல்கள் இடம்பெறுவது பற்றி என்ன நினைக்கிறீங்க?

வரவேற்கத்தக்க விஷயம். சரியா பண்ணினா நல்ல ரிசல்ட் கிடைக்கும். இசையை பொறுத்தவரை ஒரு பாடகர் பாடினாதான் அதைப் பயன்படுத்த முடியும். வாய்ஸ் மாத்திக்கலாம். முன்னால டிரம்ஸ் வாசிக்கணும்னா, டிரெம்ஸ்ல வாசிப்பாங்க. இன்னைக்கு கீ போர்ட்லயே அதை வாசிக்க முடியும். இந்த மாற்றம் எப்படி தவிர்க்க முடியாததோ, அதை போலதான் ஏ.ஐ.தொழில்நுட்பமும்.

அடுத்து என்னென்ன படங்கள்?

ஹிட்லர், வள்ளிமயில், அக்னிச்சிறகுகள் படங்கள் முடிஞ்சிருச்சு. ‘அருவி’ இயக்குநர் அருண் பிரபு இயக்கும் படம், லியோ ஜான் பால் இயக்கும் படம்னு போயிட்டிருக்கு. பிச்சைக்காரன் 3 , 2026-ம்வருஷம் தொடங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE