“நான் பேசிய கருத்துகள்தான் ‘இந்தியன் 2’ படத்தில் உள்ளது” - சீமான் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “நான் பல ஆண்டுகளாக பேசிய கருத்துகள் தான் 'இந்தியன் 2’ படத்தில் இருக்கிறது. அதனால் தான் என் அண்ணன் கமல்ஹாசன் என்னை கூப்பிட்டு இந்த படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. லைகா தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் சிறப்புக் காட்சியை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கமல்ஹாசனுடன் இணைந்து பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “முதல் பாகத்தில் மக்களின் பிரச்சினையை ஒரு தாத்தா வந்து சரிசெய்வார். ஆனால் இந்த படத்தில் உன் பிரச்சினையை நீயே சரிசெய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஒவ்வொருவரும் அவரது வீட்டை சுத்தமாக வைத்தால் நாடு சுத்தமாகும் என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.

ஊழல், லஞ்சம் பிடிக்கவில்லை என்றால் நாம் அதற்கு எதிராக இருக்க வேண்டும். அநியாயத்தை தட்டிக் கேட்க ஒரு இந்தியன் தாத்தா வரவேண்டும், ஒரு கிருஷ்ணர் வரவேண்டும், ஒரு நபிகள் நாயகம், ஒரு இயேசு கிறிஸ்து வரவேண்டும் என்று எதிர்பார்க்காமல் நீயே எதிர்த்துக் கேள்வி கேள் என்பதைத்தான் படத்தில் என் அண்ணன் கமல்ஹாசன் வலியுறுத்துகிறார். நான் பல ஆண்டுகளாக பேசிய கருத்துகள் தான் படத்தில் இருக்கிறது. அதனால் தான் என் அண்ணன் என்னை கூப்பிட்டு இந்த படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார். நான் பேசிய கருத்துக்கள் தான் மொத்தமாக படத்தில் இருக்கிறது. அடுத்து ‘இந்தியன் 3’ வருகிறது” என்று சீமான் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE