உடைந்த மனங்களை இறுகப் பற்றும் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள்! 

By குமார் துரைக்கண்ணு

ரகசியங்களை ஒளித்துக் கொண்ட இரவுகளின் இருட்டினில் தட்டுப்படும் மின்மினி பூச்சிகளின் வெளிச்சம் கொடுக்கும் நம்பிக்கைக்கு இணையானது தான் திரைப்படங்களில் வரும் பாடல் வரிகள். இதை நன்கறிந்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். மின்மினி பூச்சிகளின் வயிற்றுப் பகுதியில் நிகழும் வேதியியல் மாற்றத்தால் வெளிச்சம் உண்டாவதைப் போலத்தான் அவரது பாடல் கேட்கும் போதெல்லாம் வேதியியல் மாற்றங்கள் நிகழும்.

தனது பாதுகாப்பு, உணவு, துணையை ஈர்க்க மின்மினிப் பூச்சிகளுக்கு அந்த வெளிச்சமே ஆதாரம். நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளும் அப்படித்தான். கேட்போரது மனதின் தேவை அனைத்துக்குமான ஜீவாதாரம். இவருக்கு முன்னும் பின்னுமாய் பல நூறு கவிஞர்கள் இருந்தாலும் நா.முத்துக்குமாரின் பாடல்கள் கோடி மின்மினிப் பூச்சிகளின் பேரொளியை மனதுக்குக் கொண்டு வருபவை.

'For want of the nail' என்றொரு ஆங்கில மனப்பாட பாடலைக் கேட்டிருப்போம். லாடத்தில் ஓர் ஆணியில்லாததால், குதிரை கீழே விழுந்துவிட, குதிரையால் வீரனும், வீரனால் போரும், போரால் ராஜ்ஜியமும் வீழ்ந்ததை அந்தப் பாடல் விளக்கும். ஒரு மாபெரும் ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கு ஓர் சிறிய ஆணி காரணமாகி விட முடியும் என்ற மாபெரும் தத்துவத்தை அப்பாடல் உணர்த்தியிருக்கும்.

நம்முடைய பல பிரச்சினைகளுக்கு காரணம் அதுவா? இதுவா? என்றெல்லாம் எதை எதையோ நாம் கற்பிதங்களைக் கோட்டைகளாகக் கட்டிக்கொண்டிருக்க, அதையெல்லாம் பொய்யாக்கி ஓர் சிறிய ஆணிதான் அந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி ஆற்றுப்படுத்தும் அருமருந்துதான் நா.முத்துக்குமாரின் பாடல்கள்.

இந்த எளிமையான அணுகுமுறைதான் 2000-ம் ஆண்டுகளில் தொடங்கி இப்போது வரை அவரது பாடல்கள் நம்மை இடைவிடாது இன்பமாய் இம்சித்துக் கொண்டேயிருக்கிறது. சுக்குநூறாய் உடைந்த மனங்களை பேரன்பின் பசை தடவி இறுக்கமாகப் பற்றிக் கொள்ளச் செய்யும் வல்லமை கொண்டவை நா.முத்துக்குமாரின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும். மகள் பாட்டு, தாய் பாட்டு, தந்தை பாட்டு, காதல் பாட்டு, துள்ளல் பாட்டென தான் தொட்டதில் எல்லாம், அழகியலையும் நம்பிக்கையையும் விதைக்கும் வித்தைக்காரர் அவர். வடசென்னை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட, புதுப்பேட்டை படத்தில் வரும் 'ஒரு நாளில்' பாடல் கேட்டால் போதும், எவ்வளவு துக்கத்தோடு இருந்தாலும் நாளை மீதான நம்பிக்கை தன்னெழுச்சியாக சுரக்கும். பாடலின் பல்லவியில், "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது; மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது; எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்; அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்" என்று எழுதியிருப்பார். அதே பாடலின் சரணத்தில்...

"போர்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை;
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை;
இருட்டினிலே நீ நடக்கையிலே,
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்;
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே,
உனக்கு துணை என்று விளங்கிவிடும்"

என்று ஒரு பெருங்கதையாடலை நுட்பமாய் நுனுக்கி யுவன் ஷங்கர் ராஜாவின் ட்யூனுக்குள் பொருத்தியிருப்பார். எல்லா சோகங்களும் ஒருநாள் மறைந்து போகும். முதல் நாள் ஆழமாக அழுந்தும் சோகம், அடுத்தடுத்த நாட்களில் மறந்து பறந்து போகும் என்பதை நா.முத்துக்குமாரின் பேனாமுனை இந்தப் பாடலின் வழியே பெருந்துயரைப் போக்கியிருக்கும்.

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு அவள் தான் தாய். அந்த தாய்க்கு யாழ் கொண்டு ஆனந்த தாலாட்டுப் படைத்தமைக்கு நா.முத்துக்குமாருக்கு இந்நாடு விருது வழங்கி கவுரவித்தது. இப்பாடல் வரிகள் தோறும் மகள் அல்ல அவள் ஒரு மகத்துவம் , துயர் அல்ல அவள் ஒரு தேவதை என்பதை நிறுவியிருப்பார்.

பாடலின் ஆரம்ப வரிகளில், "இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை; சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை!" ஒரு தந்தையும் மகளும் மனம்விட்டு பேசிக் கொள்வதற்கு மொழியே தேவையில்லை என்றுரைத்த தேவதூதன் நா.முத்துக்குமார். அடுத்த வரியில், சிறு புல்லில் உறங்கும் பனியின் துளியின் அழகோடு சிறியவளான மகளின் அழகை ஒப்பிட்டுக் கொண்டாடுவது எல்லாம் அழகியலின் உச்சம். இதே பாட்டில் வரும் சரணங்களில்,

"அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி" என்றும், "உன் முகம் பார்த்தால் தோணுதடி; வானத்து நிலவு சின்னதடி; மேகத்தில் மறைந்தே பார்க்குதடி; உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடி; அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து;வீட்டுக்கு அனுப்பு நல்லபடி" என்றெழுதி கடவுளும், நிலாவும் தனது மகளின் சிரிப்புக்கும், அழகுக்கும் முன்னால் ஒன்றுமே இல்லை என்பதாக கொஞ்சிக் கொண்டாடியிருப்பார்.

தொல் இசைக்கருவிகளில் ஒன்றான யாழ் மறந்த தமிழன் இருக்கலாம். நா.முத்துக்குமாரின் இந்த ஆனந்த யாழை மறந்த தமிழன் இருக்கவே முடியாது என நினைக்கும் அளவுக்கு பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தைகளின் தேசியகீதம் இந்தப்பாடல் என்றால் அது மிகையாகாது.

மென்பொருள் சூழ் உலகில், தமிழ் படித்த பிரபாகரன்களுக்கு நட்சத்திரங்கள் பக்கமாவது ஆனந்திகளின் கடிதங்களால் தான். தூரத்து மாமா வீட்டுக்குச் சென்றுவிட்ட ஆனந்திகளை பறவை போல் தேடும் பிரபாகரன்களின் அன்புக்கும் அக்கறைக்குமான இடைவெளிக்குள் பொதிந்து கிடக்கும் காதலை நா.முத்துக்குமாரின் வரிகள் வருடும் சுகத்தில் பாலைவனமும் பால்வெளியாகும்.

பாடலின் தொடக்க வரிகளில், "நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக;அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக" என்று அவளது கடித கடலுக்குள் படகாக்கி பயணிக்க வைத்திருப்பார். அதேபோல் முதல் சரணத்தில் வரும், "கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்; உரையாடல் தீர்ந்தாலும் உன் மவுனங்கள் போதும்" என்று காற்றுடன் பயணமும் காதலியின் மவுனம் காதலுக்கு போதுமானது என்று அகம் குளிர செய்திருப்பார். அதேபோல் இரண்டாவது சரணத்தில்...

"ஏழை காதல் மலைகள்தனில்
தோன்றுகின்ற ஒரு நதியாகும்;
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி,
உடையாமல், உருண்டோடும், நதியாகிடுதோ

என்று ஏதுமற்ற பிரபாகரன்களின் காதலை நதியாக்கி அழகுபார்த்த அவரது கற்பனை கவித்துவமானது. நா.முத்துக்குமாரின் இதுபோன்ற வரிகள்தான் ஆனந்திகளுக்கான பிரபாகரன்களையும், பிரபாகரன்களுக்கான ஆனந்திகளையும் பிரசவித்துக் கொண்டேயிருக்கிறது. இதுபோன்ற எண்ணற்ற பாடல்களின் வழியே நம்முள் உறைந்து கிடக்கும் நா.முத்துக்குமாரும் அவரது பாடல் வரிகளும் பேரன்பையும் நம்பிக்கையையும் உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்கும் என்பதே நிதர்சனம்.

ஜூலை 12 - கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த நாள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்