‘சேது’ பட நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் அமீர்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடைபெற்ற ‘யோலோ’ திரைப்படத்தின் தொடக்க விழா நிகழ்வில் கலந்துகொண்ட அமீர், பாலாவின் ‘சேது’படத்தின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்கும்‘யோலோ’ திரைப்படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக, இப்படம் உருவாகிறது.

இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் பேசிய அமீர், “எனக்கு சேதுவைத் துவங்கிய நாள் தான் ஞாபகம் வருகிறது. 93-ல் பாலாவின் அகிலன் பூஜை போட்ட அன்றே நின்று போய்விட்டது. தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களிடமும் அந்தக்கதை போய் வந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பின் அது சேதுவாக மாறியது. இங்கு தான் பூஜை போட்டோம், பூஜை அன்று தொழிலாளர்கள் பிரச்சினையில் நின்று போனது.

7 வருடம் கழித்து தான் முடிந்தது. அப்புறமும் படம் வரவில்லை. என்றாவது ஒரு நாள் படம் வரும் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். பாலா தன் ஒட்டுமொத்த உழைப்பையும் தந்து, ஒரு தலைமுறையினருக்கு வாழ்வை வாய்ப்பை தரும் படைப்பை உருவாக்கி வைத்திருந்தார்.

ஒரு திரைத் தலைமுறையே அவர் மூலமாகத்தான் வந்தது. அந்த ஆலமரம் தான் பல புதிய கிளைகளைத் தந்துள்ளது. இயக்குநர் சாமை என்னிடமிருந்து சமுத்திரகனி கூட்டிக்கொண்டு போய்விட்டார். நல்ல ஆட்களையெல்லாம் அவர் கூட்டிக்கொண்டு போய்விடுவார்.இந்தப்படம் பெரிய வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE