முதல் பார்வை: இருட்டு அறையில் முரட்டு குத்து

By உதிரன்

காதலியை வசியப்படுத்த நினைக்கும் காதலன் அவர்கள் தங்கியிருக்கும் பங்களாவில் உள்ள பேயிடம் மாட்டிக்கொண்டால் அந்தப் பேய் வெர்ஜின் பையன்தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் அதுவே 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.

கௌதம் கார்த்திக் நிறைய பெண் தோழிகளுடன் பழகுகிறார். ஆனால், அந்தப் பழக்கம் கல்யாணத்தில் முடியாமல் பிரேக் அப் ஆகி நிற்கிறது. இந்த சூழலில் கௌதமின் பெற்றோர் வைபவியைப் பெண் பார்க்கிறார்கள். வைபவியின் தந்தையோ பையனும், பொண்ணும் பழகிப் பார்க்கட்டும் என்கிறார். அதன் அடிப்படையில் கௌதம் கார்த்திக்கும், வைபவியும் தாய்லாந்தின் பாட்டியாலா நகரத்தின் கடற்கரை ஓரத்தில் உள்ள ஒரு பங்களாவில் ஒரு வாரம் தங்க முடிவெடுக்கிறார்கள். உடன் கௌதமின் நண்பன் ஷாராவும், அவரது காதலி யாஷிகாவும் இணைந்துகொள்கிறார்கள். அதில் 25 வருடங்களாக கன்னி கழியாமல் காத்திருக்கும்(?!) பேயிடம் சிக்கிக்கொள்கிறார்கள். பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள், அங்கிருந்து தப்பித்தார்களா, பேய் என்ன செய்கிறது, தப்பிக்கப் போடும் திட்டங்கள் என்ன ஆகின்றன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

ஒரே விஷயத்தை சுற்றிச் சுற்றிச் சொல்வதாகத் தோன்றுகிறதா? உண்மைதான். படத்தில் கதை என்ற ஒன்று இருக்கிறதா என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கதை அல்லது கதை போன்ற பாவனையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று இப்படித்தான் கஷ்டப்பட்டு சொல்ல வேண்டியதாகிவிடுகிறது.

ஹரஹர மகாதேவகியின் 'ஏ'கோபித்த வரவேற்புக்குப் பிறகு சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. ஆனால், அடல்ட் படம் எடுக்காமல் காம(நெ)டிப் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர். நேரடியாகவே பாலியல் குறித்த வசனங்களால், காட்சிகளால் கிளுகிளுப்பை ஏற்படுத்தி ரசிகர்களை கைத்தட்ட வைத்து விடுகிறார். ஆனால், படத்தில் எதற்காகச் சிரித்தார்கள், எதை நோக்கிப் படம் நகர்கிறது என்று யோசித்தால் அது ஆபத்தின் எல்லையை உணர்த்துகிறது. பாலியல் குறித்த குறியீடுகளை, பொருட்களை, வசனங்களை படம் முழுக்கப் பயன்படுத்தி இருக்கிறார். அது போதாது என்று கதாநாயகிகளை காட்சிப் பொருளாக்கி இருக்கிறார்,

கௌதம் கார்த்திக் நன்றாக டான்ஸ் ஆடியிருக்கிறார். சுமாராக நடித்திருக்கிறார். ஆனால், இயல்பான நடிப்பு இன்னும் அவருக்கு கைகூடவில்லை. வைபவி கதாநாயகிக்கான பங்களிப்பை வழக்கமாக செய்துவிட்டுச் செல்கிறார். ஷாரா படத்தின் ஒரே ஆறுதல். அடிக்கடி சிரிக்க வைக்கிறார்.

'நான் கடவுள்' ராஜேந்திரன், மதுமிதா, கருணாகரன், பால சரவணன், ஜான் விஜய், அருண் சின்னையா என படத்தில் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லோரும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். பேயாக நடித்திருக்கும் சந்திரிகா ரவி மிரட்டாமல் காமெடிப் பேயாகவே கடந்துபோகிறார்.

அடல்ட் காமெடிப் படம் என்றால் இரட்டை அர்த்த வசனம் அல்லது காட்சியை வைத்து அதற்கு இன்னொரு அர்த்தம் கற்பிப்பது வழக்கம். ஆனால், இப்படத்தில் வெளிப்படையான பாலியல் வசனங்கள், காட்சிகள் ஆகியவற்றின் நீல(ள)ம் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

காட்சிக்கும், கதைக்கும் சம்பந்தமே இல்லாமல் சொல்லி சொல்லியே பாடல்களைத் திணித்து பொறுமையை சோதிக்கிறார்கள். பாலமுரளி பாலுவின் இசையும், பின்னணியும் பரவாயில்லை ரகம். பள்ளுவின் ஒளிப்பதிவு படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது.

நான்கைந்து நேரடி பாலியல் வசனங்கள், சைகைகள், காட்சிகள் இருந்துவிட்டால் ஒரு படத்தை எடுத்துவிடலாம், அதில் கற்பனை, கதை, திரைக்கதை எதுவும் தேவையில்லை என்று உறுதியாய் நம்பியிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார். அந்த அலட்சியம் படத்தின் காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியைப் போலச் செய்து காட்சிகள் அமைத்திருப்பது ரசிக்கும்படியாகவோ, சுவாரஸ்யமாகவோ இல்லை. சமையல் மந்திரம், சன்னி லியோன், பிக் பாஸ், கன்னிப் பையன்களைக் கேட்கும் பேய் என இத்தனை சங்கதிகளை திரைக்கதையில் புகுத்தியும் படம் எடுபடாமல் போவதற்குக் காரணம் ஆபாசமே அடிப்படை என்பதால்தான்.

தன் பாலின உறவு, ஆண்- பெண் உறவு என இரண்டு வெவ்வேறு உறவுகளையும் சில்லறைத்தனமாகவே இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார். அதெல்லாம் காமெடியாகப் போற்றப்படும் என்று வேறு அவர் நம்பியிருப்பதுதான் சோகம். அடல்ட் காமெடி ஜானர் தமிழ் சினிமாவில் வந்தால் அது ஆரோக்கியமானதுதான். ஆனால், பெண் உடலைக் காட்சிப்படுத்தி அந்த உறவை அபத்தமாகச் சொல்வதுதான் படத்தின் பலவீனம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்