‘நம்முடைய ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் சேனாபதி கேரக்டர்!'- இயக்குநர் ஷங்கர்

By செய்திப்பிரிவு

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம், ‘இந்தியன் 2’. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா, ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

வரும் 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அதில் கமல்ஹாசன் கூறியதாவது: ஷங்கர் அமைத்துள்ள திரைக்கதைதான் இந்தப் படத்தில் நான் நடிக்க காரணம். ஒரு கதாசிரியனாக, நடிகனாக எனக்குள் வியப்பை ஏற்படுத்தும் விஷயங்களை, அவர் படத்தில் வைத்திருக்கிறார். ‘நீங்க ஏற்கெனவே அந்தப் படத்துல இதை பண்ணியிருக்கீங்களே, இந்தப் படத்துல அதை பண்ணியிருக்கீங்களே?’ என்று சொல்லலாம்.

ஆனால், அதை மீறிய விஷயங்களை இதில் பார்க்கலாம். எம்.ஜி.ஆரின் ‘அடிமைப்பெண்’ செட் சத்யா ஸ்டூடியோவில் போடப்பட்டிருந்தபோது அதைப்பார்க்க வாய்ப்பு கிடைக்குமா? என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால், அதை விட பிரம்மாண்ட செட், நான் நடித்துள்ள இந்தப் படத்துக்காகப் போட்டிருந்தார்கள். அதுபோன்ற நிறைய பிரம்மாண்டங்கள் படத்தில் இருக்கின்றன. இந்தியன் முதல் பாகம் பண்ணும்போது தமிழில் அது அதிக பட்ஜெட் என்று அப்போது பேசப்பட்டது.

இப்போது பார்த்தால், அந்த இந்தியன் குடும்பம், நடுத்தர குடும்பம் போல தெரிகிறது. இந்த இந்தியன் குடும்பம் நல்ல வசதியான குடும்பமாக இருக்கிறது. வசதி என்றால் பணம் மட்டுமல்ல. தொழில்நுட்ப கலைஞர்கள், திறமையான நட்சத்திரங்கள் ஒன்றாக இணைவது, ஒரு பாடல் காட்சிக்கு மிஸ் யுனிவர்ஸை நடிக்க வைப்பது உள்ளிட்ட விஷயங்களைச் சொன்னேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

இயக்குநர் ஷங்கர் பேசும்போது, “இந்தியன் படம் இயக்கும்போது 2-ம் பாகம் பண்ணுவேன் என்று நினைக்கவில்லை. அப்போது சேனாபதி கேரக்டருக்கு, இந்தியா சுதந்திரம் அடைந்த விஷயம் உள்ளிட்டவற்றை வைத்து, பிறந்த தேதி, வருடத்தைக் குறிப்பிட்டிருந்தோம். இப்போது பண்ணும்போது அவருக்கு என்ன வயது என்ற கேள்வி எல்லாம் வருகிறது. சூப்பர் மேனுக்கு வயதே கிடையாது. எழுத்தாளர் இயான் ஃபிளமிங் புத்தகத்தில் எழுதிய ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரின் வயதை கணக்கிட்டால் இப்போது 102. நாம் அப்படியா பார்க்கிறோம்? அதை போலதான் இதுவும்.சேனாபதி கேரக்டர், நம் எல்லோரின் மனதுக்குள்ளும் இருக்கிற கோபம், ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

இந்தப் படத்தில், ஆர்.கே.லஷ்மணின் கார்ட்டூனான காமன்மேன் கதாபாத்திரத்தை 3டி அனிமேஷனில் கதை சொல்லும் டூலாக பயன்படுத்தி இருக்கிறோம். பொலிவியாவில் எடுத்த காலண்டர் பாடல், ரவிவர்மனின் ஒளிப்பதிவு, முத்துராஜின் செட், கமல் சார் நடிப்பு என ஒவ்வொன்றும் படத்தில் பிரம்மாண்டமாக இருக்கும்” என்றார். நடிகர் சித்தார்த் உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE