“வாழ்க்கைக்கு நெருக்கமான படங்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்” - வெற்றிமாறன்

By செய்திப்பிரிவு

சென்னை: “நம் வாழ்க்கைக்கு நெருக்கமான படத்தை மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நான் எப்போதும் நம்புவதுண்டு. திரையரங்குகள் மூலமாக மக்களிடம் ஒரு படத்தை கொண்டு செல்வதில் இருக்கும் படைப்பு சுதந்திரம், ஓடிடிக்கு செல்லும்போது இருப்பதில்லை” என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,“இன்றைய காலகட்டத்தில் மக்கள் திரையரங்குக்கு வருவதில் சிக்கல் உள்ளது. ஓடிடியை நம்பித்தான் வருமானம் இருக்கும் சூழலில், அதை மாற்றியமைத்த படமாக ‘கருடன்’ அமைந்துள்ளது மகிழ்ச்சி.

ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக திரையரங்குகள் மூலமாக மக்களிடம் ஒரு படத்தை கொண்டு செல்வதில் இருக்கும் படைப்பு சுதந்திரம், ஓடிடிக்கு செல்லும்போது இருப்பதில்லை. நம் படங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, என்ன முதலீடு செய்தோமோ அதை திரும்பப் பெறும் மாடலே மிகவும் ஜனநாயகப்பூர்வமான மாடல் என நினைக்கிறேன். அதை வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதை ‘கருடன்’ நிரூபித்துகாட்டியுள்ளது.

சசிகுமார் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஆச்சரியம் தான். எல்லோரும் சூரிக்காக படத்தில் இணைந்தனர். இந்தப் படத்தின் நடிக்கும்போது சூரிக்கு ஏற்கெனவே இருந்த காயம் இன்னும் தீவிரமானது. அதையும் தாண்டி சூரி படத்தில் நடித்து முடித்தார். நம்மை இம்ப்ரஸ் செய்வதற்கும், ஆச்சரியப்படுத்துவதற்குமான நடிகராக சூரி இருக்கிறார்.

நடிக்க முயற்சிக்காமல், உணர்வையும், கதாபாத்திரத்தையும் உள்வாங்கி வெளிப்படுத்த முயல்கிறார் சூரி. நம் வாழ்க்கைக்கு நெருக்கமான படத்தை மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நான் எப்போதும் நம்புவதுண்டு” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE