மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?

By கலிலுல்லா

சலூன் கடை ஒன்றில் வேலை பார்க்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி) மனைவி விபத்தில் இறந்துவிடுகிறார். மகள் ஜோதி (சச்சனா) ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, தனிமையில் இருக்கிறார் மகாராஜா. வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து லக்‌ஷ்மியை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

தொடக்கத்தில் இந்தப் புகாரை உதாசினப்படுத்தும் காவல் துறை, ரூ.7 லட்சம் வரை காசு கொடுப்பதாக மகாராஜா சொன்னதும், லக்‌ஷ்மியை தேடிக் கண்டுபிடிக்கும் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். உண்மையில் யார் இந்த லக்‌ஷ்மி? மகராஜாவின் நோக்கம் என்ன? அவருக்கான பின்புல கதை என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை.

‘குரங்கு பொம்மை’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு முடிச்சை தனக்கத்தே வைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு வரை அந்த முடிச்சு என்ன என்ற கேள்வியும், ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே தக்க வைத்து நகரும் திரைக்கதை எங்கேஜிங்காகவே கடக்கிறது. கிட்டத்தட்ட ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட வசனம் போல ‘ரீபீட்’ வசனத்தை கொண்டு மெல்லிய நகைச்சுவை உதவியுடன் பெரிய அளவில் எங்கும் அயற்சி கொடுக்காமல் நகர்த்தியிருப்பது பலம்.

‘நான் லீனியர்’ பாணியில் காட்சிகளை முன்னுக்குப் பின்னாக களைத்துப் போட்டு விளையாடியிருக்கிறார் இயக்குநர். அந்த விளையாட்டு தொடர்ந்து கவனிக்க வைக்கிறது. அதுவும் இடைவேளைக்குப் பிறகு படம் முடிச்சை அவிழ்க்கும் இடத்தை நோக்கி நகர்வதும், இறுதி 20 நிமிடமும் சுவாரஸ்யம். கவித்துமான ஃப்ரேம் ஒன்றும் ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறது.

அடுத்து என்ன என்ற பார்வையாளர்களின் ஆர்வத்தை இறுதிவரை எடுத்து வந்து சென்சிட்டிவான களத்துக்குள் நுழைந்திருப்பதும், எங்கேஜிங்கான நகர்த்தலும் ஓகே. ஆனால், சென்சிட்டிவான கன்டென்ட்டிலும், அறத்திலும் படம் தடுமாறுகிறது.

காவல் துறையினரின் தாக்குதலை காமெடியாக சித்திரித்திருப்பது, முக்கியமான பிரச்சினையை வெறும் பழிவாங்கும் கதையாக சுருக்கியிருப்பது, பாதிக்கப்பட்டவரை கொடூரமாக காட்சிப்படுத்தியிருப்பது, பெண்களுக்கெதிரான குற்றத்தை பேசும் படத்தில் அழுத்தமான பெண் கதாபாத்திரமில்லை என்பது முரண். அத்துடன் படம் முன்வைக்கும் தீர்வும் கூட முழுமை பெறவில்லை. முதல் குற்றவாளியை விஜய் சேதுபதி எப்படி கண்டறிந்தார்? ஏன் அனுராக் காஷ்யப் கொல்லாமல் விட்டார்? - இப்படி லாஜிக்காக கேள்விகளும் எழாமலில்லை.

மிகையுணர்ச்சிகளை களைந்து, சோகத்தை சுமந்த முகத்துடன் சாமானிய சலூன் கடைக்காரரின் உணர்வுகளை அழுத்தமாக பதிய வைக்கிறார் விஜய் சேதுபதி. ஆக்‌ஷன் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தில் கத்தும் இடங்களிலும் கவனிக்க வைக்கிறார். 50 படங்களைக் கடந்த நடிப்பின் முதிர்ச்சி திரையில் தெரிகிறது.

அனுராக் காஷ்யப் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், கதாபாத்திரத்துடன் அவரை கனெக்ட் செய்ய முடியவில்லை. கூடுதலாக லிப் சிங்கிங் அப்பட்டமாக காட்டிக் கொடுக்கிறது. நட்டி நட்ராஜ் காவல் துறை அதிகாரியாக அதகளம் செய்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் கோரும் நடிப்புக்கு சிங்கம் புலி நியாயம் சேர்க்கிறார்.

அபிராமி, வினோத் சாகர், பாய்ஸ் மணிகண்டன், முனீஷ்காந்த் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சச்சனா கவனம் பெறுகிறார். மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா கதாபாத்திரங்கள் ஏன் என புரியவில்லை.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது. காட்சிகள் கோரும் உணர்வுக்கு அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை பாதி தீனியிடுகிறது. படத்தின் முக்கியமான பலம் ஃபிலோமின் ராஜ். படத்தை நீட்டி இழுக்காமல் கச்சிதமாகவும், நான் லீனியர் முறையில் காட்சிகளை குழப்பாமல் அடுக்கியும் முறைபடுத்தியதற்கு பாராட்டுகள்.

மொத்தமாக, ஓர் ஆர்வத்தை தூண்டி இறுதி வரை இழுத்துச் செல்லும் திரைக்கதைதான் ‘மகாராஜா’. ஆனால், பொறுப்புடனும், ஆர்வத்தை தவிர்த்த ஆழத்துடனும் எடுத்துக்கொண்ட பிரச்சினையை பேசியிருக்கிறதா என்றால், அது கேள்வியே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்