முதல் பார்வை: காளி

By உதிரன்

அமெரிக்காவின் மிகச் சிறந்த மருத்துவர் இந்தியாவுக்கு வந்து தன் பெற்றோர் தேடும் படலத்தை ஆரம்பித்தால் அதுவே 'காளி'.

நியூயார்க்கில் பரத் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார் விஜய் ஆண்டனி. லண்டன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இதயநோய் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவரது மருத்துவமனையிலேயே அவரின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அம்மாவின் சிறுநீரகம் செயலிழந்ததால் தன் சிறுநீரகத்தைத் தர முனைகிறார் விஜய் ஆண்டனி. அப்போது அவர் அப்பா 'நீ கிட்னி தருவது அம்மாவுக்குப் பொருந்தாது. நீ எங்களின் வளர்ப்பு மகன்' என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறார். அம்மாவுக்கு வேறொரு ஏற்பாட்டின் மூலம் மாற்று சிறுநீரகம் பொருத்தே உடல்நலன் தேறிய பிறகு தன் சொந்தப் பெற்றோரைத் தேடிக் கண்டுபிடிக்க இந்தியா வருகிறார். எப்படி அம்மா, அப்பாவைத் தேடுகிறார், யார் உதவுகிறார்கள், பெற்றோரைக் கண்டுபிடிக்க முடிந்ததா என்ற சில பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம்.

'வணக்கம் சென்னை' படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதியின் இரண்டாவது படம் 'காளி'. கொஞ்சம் இடைவெளி விட்டு வந்திருக்கிறார் என்றாலும் நல்ல கமர்ஷியல் படத்தைக் கொடுக்க முயற்சித்த அவரது அக்கறையை வரவேற்கலாம். ஆனால், அந்த அக்கறையின் விளைவு என்ன ஆனது என்பதுதான் கேள்வியாக தொக்கி நிற்கிறது.

மருத்துவர், கல்லூரி மாணவர், திருடன், அருட்தந்தை என விஜய் ஆண்டனி நான்கு விதமான தோற்றங்களில் வருகிறார். அதில் ஓரளவு நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால், உணர்வுபூர்வமான, உருக்கமான தருணங்களிலும் ஒரே மாதிரியான முக பாவனைகளில் கதாபாத்திரத்துக்குத் தேவையான அழுத்தமான நடிப்பைத் தராமல் சமாளித்திருக்கிறார். விஜய் ஆண்டனி அமெரிக்காவில் இருந்துகொண்டு பேசும் ஆங்கிலம் சிரிப்பை வரவழைக்கிறது.

அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, சுனைனா என நான்கு ஹீரோயின்கள் படத்தில் இருக்கிறார்கள். நாட்டு வைத்தியம் பார்க்கும் நானும் டாக்டர்தான் என்று அஞ்சலி ஆரம்பத்தில் விஜய் ஆண்டனியுடன் வம்பளக்கிறார். அதற்குப் பிறகு காதலில் விழுந்து வழக்கமான அக்மார்க் நடிப்பைத் தந்து செல்கிறார். கல்லூரிக் காட்சிகளில் அம்ரிதா கவனம் ஈர்க்கிறார். சிக்கலுக்குரிய கதாபாத்திரம் என்றாலும் அதை ஷில்பா மஞ்சுநாத் சரியாகக் கையாண்டிருக்கிறார். கனமான கதாபாத்திரம், படத்தின் ஜீவனுள்ள அம்சம் என்பதைப் புரிந்துகொண்டு சுனைனா உணர்ந்து நடித்திருக்கிறார்.

யோகி பாபு அடிக்கடி சிரிக்க வைக்கிறார். நான் என்ன அப்பாவைக் கண்டுபிடிப்பது எப்படின்னு? படிச்சிட்டா வந்திருக்கேன் என சொல்லும்போது தியேட்டரில் அப்ளாஸ் எகிறுகிறது.

மதுசூதன ராவ், நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி என்று ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

ரிச்சர்ட் எம்.நாதன் கிராமத்து அழகை கேமராவில் அள்ளி வந்திருக்கிறார். அரும்பே பாடலில் விஜய் ஆண்டனியின் இசை மனதை அள்ளுகிறது. பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது. லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் பேட்டர்ன் படத்தை சோர்வில்லாமல், நெளியாமல் பார்க்க வைக்கிறது.

2000 ரூபாய் திடீர்னு செல்லாம ஆகிடப் போகுது என்று மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை போகிற போக்கில் கலாய்க்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. தீண்டாமைக் கொடுமையின் உச்சத்தையும், சாதிப் பிரிவினையின் அச்சத்தையும் கண்முன் நிறுத்துகிறார். இடது கை பழக்கம் குறித்த சுவாரஸ்ய முடிச்சைப் போட்ட விதம் இயக்குநரின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக என்று சொல்லும் அளவுக்கு மிக நுட்பமாக ஹீரோவுக்கான அளவுகோலை மாற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால், அது ஆரோக்கியமான போக்காகவோ, எடுபடும் அம்சமாகவோ இல்லை. ஒரு கதாபாத்திரத்தின் பின்னோக்குக் காட்சியில் (பிளாஷ்பேக்) அதே கதாபாத்திரம் நடிப்பதுதான் இயல்பு, வழக்கம். ஆனால், மற்ற கதாபாத்திரங்களின் பின்னோக்குக் காட்சியிலும் விஜய் ஆண்டனியே அந்தக் கதாபாத்திரமாக வருவது நெருடல். முதல் இரண்டு கதாபாத்திரங்களின் பின்னோக்கிய நகர்வு யோகி பாபுவின் பார்வையில் காட்சியாக விரிவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரி பரவாயில்லை என்று பார்த்தால் கடைசியில் ஜெயப்பிரகாஷின் பிளாஷ்பேக் காட்சியிலும் விஜய் ஆண்டனி வருவது உறுத்தலாகவே தெரிகிறது.

பெற்றோர் தேடும் பயணத்தில் கதை நாயகன் எந்த உணர்வும் இல்லாமல் அப்படியே தேமே என்று கடந்துபோகிறார். இதனாலேயே படம் மையத்தை நோக்கி நகராமல் விலகிச் செல்கிறதோ என்று தோன்றுகிறது. பெற்ற அம்மா, அப்பாவின் முக்கியத்துவத்தையோ, வளர்த்த பெற்றோரின் நலனையோ விஜய் ஆண்டனி உணராத மாதிரியே காட்சிகள் உள்ளன. விஜய் ஆண்டனிக்கு வரும் கனவும் அதில் இடம்பெறும் மாடு, பாம்பு போன்ற அம்சங்களும், தாய்ப் பாசம் குறித்த பாடலும் அவரின் முந்தைய படங்களின் சாயலை நினைவூட்டுகின்றன. இவற்றை தவிர்த்துப் பார்த்தால் 'காளி' விஜய் ஆண்டனியின் இன்னொரு படம் என்பதற்காக மட்டும் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்