கருடன் Review: சூரியின் ஆக்‌ஷன் அவதாரமும், உணர்வுபூர்வ அனுபவமும்!

By கலிலுல்லா

நியாயத்துக்கும் விசுவாசத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் இறுதியில் எதைத் தேர்வு செய்கிறான் என்பது ‘கருடன்’ படத்தின் ஒன்லைன்.

தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்). இதற்கான பட்டா கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதனை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதில் அமைச்சர் முனைப்புக் காட்ட, அதனை பராமரித்து வருகிறது செல்லாயி (வடிவுக்கரசி) குடும்பம்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி (சசிகுமார்), கர்ணா (உன்னி முகுந்தன்). இணை பிரியாத் தோழர்கள். இதில் சிறுவயதில் தனக்கு அன்னமிட்டு அடைக்கலம் கொடுத்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சொக்கன் (சூரி). இவர்களைத் தாண்டிதான் நிலத்தின் பட்டாவை எடுக்க வேண்டும். அதற்காக ஆதி - கர்ணா நட்பில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கும் அமைச்சர் அதில் வெற்றி கண்டாரா, இல்லையா? நியாயமா, விசுவாசமா என வரும்போது சொக்கன் எந்தப் பக்கம் நின்றார் என்பது படத்தின் திரைக்கதை.

வெற்றிமாறன் கதையை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் துரை செந்தில்குமார். மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிணைப்பு, சூரியின் விசுவாசத்துக்கான காரணம், நடுவே இழையோடும் காதல், கதைப்போக்கில் வந்துபோகும் காமெடி, துரோகம், திருப்பங்கள் என தெளிந்த நீரோடை போல எங்கும் நிற்காமல் ஓடுகிறது படம்.

விறுவிறுப்பை மூலதனமாக கொண்டு நகரும் திரைக்கதையில் அடுத்து என்ன என்பது சுவாரஸ்யம். எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் இடைவேளைக் காட்சி இந்த ஆண்டின் சிறந்த திரையரங்க அனுபவத்துக்கு உத்தரவாதம். சிங்கிள் ஷாட்டில் சூரி கேப் விடாமல் கொட்டித் தீர்க்கும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. கத்திக் குத்து, கழுத்தறுப்பு, கையை வெட்டுவது என அதீத வன்முறையும், தெறிக்கும் ரத்தமும் ஓவர் டோஸ்.

“நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு”, “கடைசியில நாயா இருந்த என்னைய உன்ன மாதிரி மனுசனா மாத்திட்டியே” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. அதேநேரம் ‘ஆம்பளன்னு நிரூபிக்க வைக்கில்ல” போன்ற வசனங்கள் அபத்தம்.

சண்டைக் காட்சி ஒன்றில் சசிகுமார் குழந்தையை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. கர்ணா கதாபாத்திரத்தின் மனமாற்றங்களில் அழுத்தமில்லாமல் கடக்கிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் ‘மண், பெண், பொன்’ தான் காரணம் என்கிறது வாய்ஸ் ஓவர். பெண்ணை குற்றப்படுத்தும் வசனத்துக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்?

கோயில் திருவிழாவில் வெறித்தனமான ஆட்டத்தை ஆடுவது, விசுவாசத்தில் உருகுவது, குற்றவுணர்வு, நியாயத்துக்கும் - உறவுக்கும் இடையில் சிக்கி தவிப்பது, சிங்கிள் ஷாட் வசனங்கள், கதறி அழும் காட்சி, ஆக்‌ஷன் பரிணாமம் என மொத்த திரையையும் ஆக்கிரமித்து நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார் சூரி.

சசிகுமாருக்கு கிட்டதட்ட ‘சுந்தரபாண்டியன்’ ரக கதாபாத்திரம். அதை நேர்த்தியாக கையாள்கிறார். கட்டுமஸ்தான் உடம்புடன் க்ளைமாக்ஸில் கூடுதலாக ஸ்கோர் செய்கிறார் உன்னி முகுந்தன். நன்றாகவே எழுதப்பட்ட கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார் சசிகுமாரின் மனைவியாக வரும் ஷிவதா. அனுபவ நடிப்பில் மிளிர்கிறார் வடிவுக்கரசி. ரோஷினி ஹரிபிரியன், ரேவதி ஷர்மா, பிரகிடா தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார் தேர்ந்த நடிப்பு.

இடைவேளைக்காட்சியில் சிலிர்ப்பனுபவத்தை கொடுத்து சூரியுடன் சேர்ந்து தாண்டவமாடுகிறது யுவனின் பின்னணி இசை. உமா தேவி வரிகளில் ‘கண்ணில் கோடி’ பாடல் கவனிக்க வைக்கிறது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதம், ஆர்தர் ஏ.வில்சனின் நேர்த்தியான ஒளிப்பதிவுக்கு சான்று. கலர் டோன் தனித்து தெரிகிறது. பிரதீப் ராகவின் நெருடலில்லாத ‘கட்ஸ்’ சிறப்பு.

கணிக்க கூடிய கதைதான் என்றாலும், அதை அயற்சியில்லாத திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொல்ல முயன்றிருக்கிறது ‘கருடன்’. குறிப்பாக சூரியின் திரை வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்