என் பேச்சை சர்ச்சையாக்கி விட்டார்கள்: மிஷ்கின் 

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'ஹிட்லிஸ்ட்'. சூர்ய கதிர், கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்துள்ளார். இதில் சரத்குமார், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் மிஷ்கின் பேசும்போது கூறியதாவது: கடந்த மேடையில் கோயிலுக்கு போகாதீர்கள், சினிமாவுக்கு செல்லுங்கள் என்று நான் சொன்னது, பெரிய சர்ச்சையாகிவிட்டது. நான் கோயில் எனச் சொன்னது சர்ச்சையும் மசூதியையும் சேர்த்துதான். நான் பிறந்த குடும்பம் இந்து, வளர்ந்த குடும்பம் முஸ்லீம், கல்யாணம் செய்தது கிறிஸ்தவ குடும்பம். நான் ஏன் தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன் என்றால், தியேட்டர்கள் இன்றைக்கு வெறிச்சோடி கிடக்கின்றன. ஏனென்றால் எல்லோர் வாழ்க்கையும் ஒரு செல்லுக்குள், ஒரு விநாடிக்கு 30 சேனல்களை மாற்றக் கூடிய ரிமோட்டுக்குள் வந்துவிட்டது.

இரண்டு பேராக உட்கார்ந்து டிவி பார்த்து விடலாம். ஆனால் தோனி விளையாடுவதை நேரில் போய் பார்த்தால்தான் அது கொண்டாட்டம். கோயிலும், சர்ச்சும், மசூதியும் ஆன்மிக விசாரணையை நடத்துபவை. சினிமா தியேட்டர், நீதி விசாரணை செய்கிறது. இன்றைக்கு இதுதான் தேவை. அதனால்தான் அப்படிச் சொன்னேன்.

10 நிமிடப் பேச்சில் முழுவதையும் விளக்கி சொல்லிவிட முடியாது. அதை ஒற்றைக் கருத்தாக எடுத்துக் கொண்டு சாடாதீர்கள். கோயிலுக்கும் சர்ச்சுக்கும் மசூதிக்கும் செல்லுங்கள், தியேட்டருக்கு அடிக்கடி செல்லுங்கள். இவ்வாறு மிஷ்கின் பேசினார். விழாவில் இயக்குநர்கள் விக்ரமன், கே.பாக்யராஜ், பார்த்திபன், சுப்ரமணிய சிவா, வசந்தபாலன், நடிகர் சரத்குமார், ஜெயம் ரவி, ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE