“இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறை உண்டு” - பிரவீன் காந்திக்கு வெற்றிமாறன் பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: “இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறைகள் இருந்துகொண்டுதான் உள்ளன” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஞ்சித்தின் ‘குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பிரவீன் காந்தி, “பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வளர்ச்சியால் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவர்களை ஒதுக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன், “இந்தியாவில் சாதிய ரீதியான ஒடுக்குமுறை இன்று இல்லை என்றோ அல்லது சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என ஒருவர் சொன்னால், அவர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தமிழகத்தில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இந்தியா முழுவதும் சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளன” என்றார்.

அமீர் குறித்து கேட்டதற்கு, “ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக அமீரை விசாரித்தனர். அந்த விசாரணை முடிந்தது. அவர் அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்” என்றார். மேலும், “விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் 15, 20 நாள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கும். இப்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. படைப்பாளிக்கான உரிமம் தேவை என நினைக்கிறேன். விஜய் அரசியலில் முழு மூச்சாக செயல்படும்போது அதைப்பற்றி நாம் பேச முடியும்” என்றார் வெற்றி மாறன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE