“திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஆரோக்கியத்தில் சுயநலம் தேவை” - ஜோதிகா

By செய்திப்பிரிவு

சென்னை: திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் சுயநலத்துடன் இருக்க வேண்டும் என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

பார்வை மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் போலாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஸ்ரீகாந்த்’. ராஜ்குமார் ராவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். இப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (மே 3) சென்னையில் நடைபெற்றது. இதில் ஜோதிகா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது: “இது மிகவும் துணிச்சலான ஒரு படம். இது சொல்லப்பட வேண்டிய கதை. ஸ்ரீகாந்த் போலாவின் கதையில் ஓர் அங்கமாக இருப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். இது தனிப்பட்ட முறையில் என்னுடைய கரியரில் மிகவும் முக்கியமான படம். ஆசிரியையாக நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. ’காக்க காக்க’, ‘ராட்சஷி’ படங்களில் கைகொடுத்த அதிர்ஷ்டம் இப்படத்திலும் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்.

பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. இரண்டு காட்சிகளாக இருந்தாலும் கூட அதில் பெண்கள் நிஜ வாழ்க்கையைப் போலவே வலிமையானவர்களாக சரியான முறையில் காட்டப்பட்டால் நான் முழு சம்மதம் தெரிவித்து விடுவேன். பெண்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் நான் திரையில் நடிக்க விரும்புகிறேன். அதை நிரூபிக்க ஒட்டுமொத்த படத்திலும் நான் தோன்ற வேண்டியதில்லை.

பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கொஞ்சம் சுயநலமாகவும் இருக்க வேண்டும். நாம்தான் நம் குடும்பத்துக்கு பொறுப்பு, நம் குடும்பத்தின் முதுகெலும்பு. ஒரு 45 நிமிடம் ஒதுக்கி பெண்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம்” என்று ஜோதிகா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE