நடிகர்கள் சதவீத அடிப்படையில் சம்பளம் வாங்கினால் யாருக்குமே பாதிப்பு இருக்காது: திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி

By கா.இசக்கி முத்து

முன்னாள் முன்னணி விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர், திரையுலகில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையில் பங்கேற்று பேசி முடித்துவைப்பவர், ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர் என திருப்பூர் சுப்ரமணியத்துக்கு பல முகங்கள் உண்டு. ஹோட்டல் அறையிலிருந்து ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தவரை திடீரென்று சந்தித்துப் பேசினோம்.

"இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் படங்கள் போட்டுதான் தியேட்டரை ஓட்டணும் தம்பி. சென்னை தியேட்டருக்கு எந்த மொழிப் படங்கள் என்றாலும் மக்கள் வருவார்கள். ஏன்னா இங்கு வேற்று மொழி பேசுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். எங்க ஊரில் எல்லாம் தமிழ்ப் படங்கள் வெளியானால் மட்டும்தான் மக்கள் வருவாங்க. இந்த ஸ்டிரைக்கால் தொழிலாளிகள் தொடங்கி தயாரிப்பாளர்கள் வரை அனைவருக்குமே நஷ்டம் தான். ஸ்டிரைக்கை சீக்கிரம் முடிப்பது நல்லது" என்று தனது ஆதங்கத்தைப் பேசிக் கொண்டே வெள்ளை வேஷ்டி - சட்டை என தயாராகி வந்தார்.

VPF கட்டணத்தை திரையரங்க உரிமையாளர்களை கட்டச் சொல்ல வேண்டும் என்ற பேச்சு நிலவுகிறதே?

VPF என்பது Virutal Print Fee என்று அர்த்தம். முதலில் பிரிண்ட் போட்டு படம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், இப்போது டிஜிட்டலுக்கு பணம் கொடுக்கிறார்கள். இது புரொஜக்டருக்கான கட்டணம் அல்ல. புரொஜக்டருக்கான கட்டணம் என்றால் கட்டத் தயார். தயாரிப்பாளர்கள் பணத்தை க்யூபுக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் யாருக்கு அளிக்கிறார்கள் என்பது தெரியாது. மாஸ்டரிங், ப்ராஸஸ், சாட்டிலைட் வாடகை என பல செய்முறைகள் செய்ய இப்பணம் வாங்குவதாக சொல்கிறார்கள். இதில் ஏன் எங்களை இழுக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பிரிண்ட் காலம்வரை, பிரிண்ட் கொடுத்தீர்கள் படம் ஓட்டினோம். இப்போது திரையரங்குகளில் இருக்கும் புரொஜக்டரில் லோட் பண்ணிக் கொடுங்கள், படம் ஓட்டுகிறோம். அந்தக் கட்டணத்தை கட்டிச் சொல்லிக் கேட்காதீர்கள். நாங்கள் கட்ட முடியாது. தற்போது தமிழ் படம் கேரளா, கர்நாடகாவில் ஓட்ட வேண்டும் என்றால் VPF கட்ட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் கட்ட மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்.

தற்போது நிறைய படங்கள் வெளியாகின்றன. ஆனால் எதிலுமே தயாரிப்பாளருக்கு லாபம் இல்லை என்கிறார்களே. எது உண்மை?

ஆண்டுக்கு 240 படங்களில் சுமார் 200 படங்கள் அனுபவம் இல்லாதவர்கள் படம் எடுக்க வர்றதுதான் காரணம். அனுபவம் இல்லாமல் வந்ததால் மட்டுமே பெரிய நஷ்டம் வர ஆரம்பிச்சுடுச்சு. ஸ்டிரைக்குக்கு முந்தைய வாரம் 11 படம் ரீலீஸாச்சு. அப்போது ஒரு தயாரிப்பாளர் "க்யூப்புக்கு ஆதரவா பேசுறீங்க. இந்த 11 படத்துக்கு க்யூப் கட்டணமா 90 லட்சம் கட்டியிருக்கோம். தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் வசூல் 30 லட்ச ரூபாய் தான். 60 லட்ச ரூபாய் அநியாயமா க்யூபுக்கு போகுது" என்றார். உடனே "இந்த 11 படத்தோட புரொடக்‌ஷன் காஸ்ட் எவ்வளவு" என்றவுடன் "30 கோடியிலிருந்து 32 கோடியிருக்கும்" என்றார். 32 கோடி முதலீடு உள்ள படங்கள் 30 லட்சம் தான் வசூலாகியிருக்கு. 60 லட்சம் தான் க்யூபுக்கு போயிருக்கு. மீதி 31 கோடி எங்கே போச்சு என தேடாமல், 60 லட்சத்தைப் பற்றியே பேசிட்டு இருக்காங்க.

நீங்கள் விநியோகஸ்தராக இருக்கும் போது - இப்போது என திரையுலகில் நடக்கும் விஷயங்களை ஓப்பிடுங்களேன்?

முன்பு எல்லாம் பாலாஜி, தேவர் பிலிம்ஸ், ஏ.வி.எம், ஆர்.பி.செளத்ரி போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே, சரியா திட்டமிட்டு படம் எடுத்தாங்க. இப்போ ஒரு படம் எடுக்கிறாங்க, காணாம போயிடுறாங்க. இதைக் கேட்டால் நாங்க சின்ன புரொடியூசர்னு சொல்றாங்க. சிறு தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கு வரும் போது 3 லட்சம் வாங்கி மெம்பராகச் சேர்ந்தால் மட்டும் பத்தாது. அவங்களுக்கு சரியான கவுன்சிலிங் கொடுத்து, படத்தைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டு தொழிலுக்கு வரணும்.

முன்பு எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் போன்றோர் படங்களை எடுத்துப் பார்த்தால் புரொடக்‌ஷன் காஸ்ட் 50 லட்சமா இருக்கும். அதில் நாயகனின் சம்பளம் 15 லட்சமா இருக்கும். மற்ற நடிகர்களுக்கு 5 லட்சம் சம்பளம், மீதி 30 லட்சத்தில் படத்தை தயாரித்தார்கள். இன்றைக்கு 100 கோடி பட்ஜெட்டில் 75 கோடி ஆர்டிஸ்ட், டெக்னிஷியன் சம்பளம். 25 கோடி தான் புரொடக்‌ஷன் செலவு. அப்போ தயாரிப்பு செலவை விட 3 மடங்கு அதிகமா சம்பளம் கொடுக்கிறாங்க. இப்படி பண்ணினால் நஷ்டம் வரத்தான் செய்யும்.

முன்பு படத்தை 12 நாள், 30 நாள், 45 நாட்களுக்குள் மொத்தப் படத்தையும் முடித்துவிடுவார்கள். இன்றைக்கு ஒன்றரை வருஷம் படமெடுக்கிறார்கள். இப்போது ஒரு நடிகர் ஒன்றரை வருஷமா ஒரே படத்தில் நடிக்கிறார் (விஜய் சேதுபதி தவிர). முன்பு ஒரு நடிகர் ஒரே சமயத்தில் 6 படங்களில் நடித்தார். ஒன்றரை வருஷத்துக்கு என்ன வட்டியாகிறது. டெக்னிக்கலாக எங்கேயோ சென்று கொண்டிருக்கிறோம் என்றால் 45 நாளில் எடுக்க வேண்டிய படத்தை 30 நாளில் தானே எடுக்க வேண்டும். தற்போதுள்ள டாப் 10 நடிகர்களின் படங்கள் ஏதாவது 3 மாதத்தில் முடித்துப் பார்த்திருக்கிறீர்களா? இப்படிப் போனால் எப்படி லாபம் வரும்.

சினிமா என்பது பைனான்ஸை நம்பி வாழும் தொழில். 60 நாளில் படம் முடித்து பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கும், ஒன்றரை வருஷம் கழிச்சு பணத்தைக் கொண்டு போய் கொடுப்பதற்கும் வட்டி வித்தியாசம் எவ்வளவு இருக்கும் என பார்த்துக்கோங்க. வட்டியே படத்தின் பட்ஜெட்டுக்கு மேல் போய்விடும்.

திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வருவதும் குறைந்து வருகிறது என்கிறார்களே?

'பாகுபலி' மாதிரியான பிரம்மாண்ட படங்களுக்கு மட்டும் தான் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள்னு சொல்றாங்க. அப்படியல்ல. 'அருவி', 'தனி ஒருவன்', 'விக்ரம் வேதா' போன்ற படங்கள் பிரம்மாண்டமானவை அல்ல என்றாலும், மக்கள் தியேட்டருக்கு வந்துதானே பார்த்தாங்க. தரமான படங்கள் கொடுத்தால் மக்கள் வர்றாங்க. இவர்கள் கதையில் கவனம் செலுத்த மாட்டிக்கிறாங்க.

கடந்தாண்டு எந்த ஒரு பெரிய நடிகர் படமும் வெற்றி இல்லையா?

'மெர்சல்' நல்லா போச்சு, ஆனால் தயாரிப்பாளருக்கு லாபமில்லனு சொல்றாங்க. என்ன காரணம் என்று தெரியல. படம் தொடங்கி ஒரு வருஷம் ஷுட் பண்ணியிருப்பாங்க, இதனால் வட்டியே பெரிசா கொடுத்திருப்பார். இதனால் லாபமில்லாமல் இருக்கலாம். ஷுட்டிங் நாட்களைக் குறைத்தால் லாபம் கிடைக்கும். ஒன்றரை வருஷம் ஷுட்டிங் நடந்தால், இப்போது அல்ல எப்போதுமே லாபம் கிடைக்காது.

தற்போதுள்ள நடிகர்களுக்கு அவர்களின் பட வசூல் தெரிகிறதா. முன்பு போல் ரஜினி மற்றும் விஜய் உங்களிடம் பேசுகிறார்களா?

ரஜினி மற்றும் விஜய் இருவருமே நல்ல நண்பர்கள். சிவாஜி, சந்திரமுகி, முத்து, அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற படங்கள் வெளியான அன்னைக்கு நைட் ரஜினி சார் போன் பண்ணுவார். எப்படியிருக்கு, என்ன சொல்றாங்க, நல்ல போகுதா என்று கேட்பார். இன்றைக்கு அவர் கூட கேட்பதில்லை. 300 கோடி வசூல், 400 கோடி வசூல் என்று சொல்வதை மட்டுமே நம்புகிறார்கள். ப்ரியமானவளே, ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் வெளியான அன்னைக்கு விஜய் போன் பண்ணுவார். அண்ணா படம் எப்படி, நல்லா போகுதுங்களா என்று விசாரிப்பார். அப்போது எல்லாம் 100-வது நாள் விழா கோயம்புத்தூரில் வைப்போம்.

இன்றைக்கு யாருமே கேட்பதில்லை. தயாரிப்பாளர்களே விளம்பரத்தில் கோடிகளை அள்ளிய வசூல் என்று போடுகிறார்கள். ஒரு படம் ஹிட்டா, இல்லையா என்பதை விநியோகஸ்தரையும், தியேட்டர்காரங்களையும் தான் கேட்கணும். இவர்கள் இருவரையும் வைச்சுதான் வெற்றி விழாவே கொண்டாடணும். அதெல்லாம் இப்போ இல்ல. படம் வெளியான 3-ம் நாள் படத்தின் நடிகர்கள் ஒன்றுகூடி சக்சஸ் மீட் என்கிறார்கள். 15 நாள் சக்சஸ் மீட் கொண்டாடுங்கள், அப்பட விநியோகஸ்தரை மேடையேற்றி பேசச் சொல்லுங்கள். அது தான் உண்மையான சக்சஸ் மீட். உண்மையான வெற்றியை மட்டும் கொண்டாடுங்கள்.

பெரிய நடிகர்களின் படத்தை வாங்கிவிட்டு நஷ்டம், பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கூறும் விநியோகஸ்தர்கள் படம் பெரிய லாபம் கொடுக்கும் போது மட்டும் எதுவும் பேசுவதில்லையே. இதுவும் தவறு தானே?

தொழிலுக்கு வந்த காலத்திலிருந்தே இதைப் பேசி வருகிறேன். எம்.ஜி.க்கு (மினிமம் கியாரண்டி) விலை கொடுத்து வாங்கிவிட்டு, திரும்பப் பணத்தைக் கேட்பது தவறு தான். இன்னொரு விஷயம் சொல்றேன். பெரிய நடிகர்களின் படத்துக்கு மட்டும் முதல் நாள் ஏன் அவ்வளவு பெரிய கூட்டம் தியேட்டருக்கு வருகிறார்கள். ஒரு நல்ல படத்தை பத்திரிகையில் என்ன தான் எழுதினாலும் தியேட்டருக்கு வருவதில்லை. குறிப்பிட்ட நடிகரின் படங்கள் எப்படியிருந்தாலும், முதல் நாள் தியேட்டரில் பார்க்க மக்கள் ரெடி. சுமார்னு விமர்சனம் வந்தால் கூட பார்க்க ரெடியா இருக்காங்க. இதுக்காக பொதுமக்களைக் குற்றம் சொல்ல முடியாது. மலையாளத்தில் தரமான படமென்றால், தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதில் எங்களை மட்டும் குற்றம் சொல்லாதீர்கள். நடிகர்களின் படத்தைப் போட்டால் தான் கூட்டம் வருகிறது. நடிகர்கள் சதவீத அடிப்படையில் சம்பளம் வாங்கினால், யாருக்குமே பாதிப்பு இருக்காது. ஹாலிவுட் படங்கள், சில தெலுங்கு படங்கள், ஆமிர்கான் படங்கள் இப்படித் தான் நடக்கிறது. சின்ன படங்கள் திரையிட்டால் மக்கள் வருவதில்லை என்றால் என்ன பண்றது. எந்த அனுபவமின்றி, நடிகர்களின்றி படம் என்று எடுத்து வந்து ஓட்டு என்றால் எப்படி ஓட்டுவது?

நடிகர்கள் அரசியலுக்கு வருவதால், திரையுலகிற்கு பின்னடைவாக இருக்கும் என கருதுகிறீர்களா?

அது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அதனைக் குறை சொல்ல விரும்பவில்லை. "எங்களை வளர்த்த தமிழ் மக்களுக்கு திரும்ப ஏதாவது செய்யணும்னு நினைக்கிறோம்" என்று சொல்கிறார்கள். தொழிலில் இருந்து கொண்டே, நடந்து கொண்டிருக்கும் அரசைக் குறை சொல்லாதீர்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். அது எந்தக் கட்சியின் அரசாங்கமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அரசைச் சார்ந்து தொழில் செய்யும் போது, குறைச் சொன்னால் கண்டிப்பாக அந்த துறையைப் பாதிக்கும். முழுநேர அரசியல்வாதியாகிவிட்டு, தாராளமாக குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்.

இப்போது நீங்கள் ஏன் படங்கள் விநியோகம் செய்வதில்லை?

எந்தப் பிரயோஜனமும் இல்ல. எந்தப் படம் வாங்கினாலும் நஷ்டம். ஏவிஎம், ஆர்.பி.செளத்ரி போன்ற நிறுவனங்கள் படமெடுப்பதில்லை. அவர்கள் பணமில்லாமல், படம் எடுக்கவில்லை. நிச்சயமாக அவர்களுக்கு படத்தயாரிப்பில் லாபமில்லை என்று தெரியும்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்