திரை விமர்சனம்: சிறகன்

By செய்திப்பிரிவு

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை போலீஸ் அதிகாரி இன்பா (வினோத் ஜிடி) விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அரசியல்வாதி சுந்தரும் (ஜீவா ரவி) கொல்லப்பட, அவர் மகன் காணாமல் போகிறார். இதற்கிடையே வழக்கறிஞர் காளிதாசை (கஜராஜ்) சிலர் தாக்குவதற்கு விரட்டுகின்றனர். போலீஸ் அதிகாரி இன்பாவின் சகோதரி, அவர் கண்முன்பே சில நாட்களுக்கு முன் தூக்குமாட்டி தற்கொலை செய்கிறார். இந்தத் தொடர் சம்பவங்களுக்குக் காரணம் என்ன? இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பவர் யார் என்பதை பரபரப்புடன் சொல்கிறது படம்.

ஒரு ‘இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்’ கதையை நான் லீனியர் முறையில் வித்தியாசமாகச் சொல்லமுயன்றிருக்கிறார், அறிமுக இயக்குநர் வெங்கடேஷ்வர ராஜ். இயக்குநரே எடிட்டர் என்பதால் கதையை முன்னும் பின்னுமாகக் குழப்பமில்லாமல் சொல்ல முடிந்திருக்கிறது அவரால். அதற்காகவே அவரை பாராட்டலாம்.

முதல் காட்சியிலேயே கதை தொடங்கி விடுவதால் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. காதல், குடும்பம் என கதையை திசை திருப்பாதது ஆறுதல். ஏன், எப்படி என்கிற கேள்விகளுக்குள் பார்வையாளர்களை இழுக்கும் முதல் பாதி திரைக்கதைக்குப் பின்பாதியில் விடை சொல்கிறது படம். ஆனால், கதையின் மைய பிரச்சினையில் எந்த அழுத்தமும் இல்லாததால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வினோத் ஜி.டி., கோமா நிலையில் இருக்கும் மகளை நினைத்து உருகும் வழக்கறிஞர் கஜராஜ், மாணவனால் மிரட்டுப்படும் ஆசிரியை பவுஷி ஹிதாயா, சக ஆசிரியை ஹர்ஷிதா ராம், அரசியல்வாதி ஜீவா ரவி, மனைவியின் தற்கொலைக்கு காரணமானவர்களைத் தேடும் ஆனந்த் நாக் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் நியாயமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். த்ரில்லர் படத்துக்கான பரபரப்பைத்தருகிறது ராம் கணேஷின் பின்னணிஇசை. இருட்டில் நடக்கும் கதைக்களத்துக்கு நம்மையும் இழுத்துச் செல்கிறது ‘சேட்டை’ சிக்கந்தரின் ஒளிப்பதிவு.

லோ பட்ஜெட் என்பதால் உருவாக்கக் குறைகள் எட்டிப் பார்க்கின்றன படத்தில். லாஜிக் சிக்கல்களும் எழுகின்றன. கதை சொல்லும் விதத்துக்கு உழைத்த குழுவினர், கதையை அழுத்தமாகச் சொல்லவும் மெனக்கெட்டிருந்தால் ‘சிறகனை’ இன்னும் ரசித்திருக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE