‘பையா’வுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது: லிங்குசாமி

By செய்திப்பிரிவு

சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்து 2010-ல் வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘பையா’. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த இந்தப் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு, வரும் 11-ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்தப் படம் பற்றி இயக்குநர் லிங்குசாமி நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

இதன் கதையை 18 நாட்களில் உருவாக்கினேன். கதையை உருவாக்கும்போதே ‘பையா’ என்ற டைட்டிலும் கிடைத்து விட்டது. ஒரு படத்துக்கு எல்லாமே கிடைத்துவிடும். டைட்டில் மட்டும் கிடைக்காது. என் முதல் படத்துக்கு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்றுதான் டைட்டில் வைத்தேன். அதை வேறொருவர் பதிவு செய்து வைத்திருந்ததால், ‘ஆனந்தம்’ என்று மட்டும் வைத்தோம். ‘சண்டக்கோழி’ பட டைட்டில் அதன் கதை உருவாக்கும்போதே எனக்கு கண்முன் ஓடியது.

‘ரன்’ படத்துக்கு ‘பிடிச்சிருக்கா’ என்ற டைட்டிலை தான் முதலில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் கூறினேன். ஆனால் அவர், படம் பார்த்துவிட்டு வரும் போது பிடிச்சிருக்கா, பிடிக்கலையா என அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்றார். எஸ்.ஜே.சூர்யா ‘குஷி’ படத்துக்கு ‘முத்தம்’ என முதலில் டைட்டில் வைத்திருந்தார். பிறகுதான் ‘குஷி’ என்று மாற்றப்பட்டது. ஏ.எம்.ரத்னம் தான் ‘ரன்’ என்ற டைட்டிலையும் வைத்தார்.

‘பையா’ டைட்டில் யோசிக்கும்போது, சிறிதாக, கூலாக இருக்க வேண்டும் என நினைத்துக் கூறினேன். என்ன அர்த்தம் என்று கேட்டார்கள். எனக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி பையாவுக்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. இதன் பாடல்களை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுகிறார்கள்.

இவ்வாறு லிங்குசாமி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE