விஷால் தொடர்ந்த வழக்கு: லைகா நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘ரத்னம்’ படத்துக்கான நிலுவை சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்தும்பிடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை திருப்பி செலுத்தாத நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ரத்னம் படத்துக்காக விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான 2 கோடியே 60 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள், எம்.சுந்தர் மற்றும் கே.ஜி. திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷால் மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு (ஏப்.3) தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE