‘கள்வன்’ கதைக்கு உதவிய அரிசிக்கொம்பன்

By செய்திப்பிரிவு

சென்னை: ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, பாரதிராஜா, தீனா உட்பட பலர் நடித்துள்ள படம் ‘கள்வன்’. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், டில்லி பாபு தயாரித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷும் ரேவா பின்னணி இசையையும் அமைத்துள்ளனர். பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இவர், முண்டாசுப்பட்டி, ராட்சசன், மரகதநாணயம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். ஏப்.4-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றிபி.வி.சங்கர் கூறியதாவது:

இது மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் கதையை கொண்ட படம். மலைக்கிராம மக்களின் வாழ்க்கை, வனவிலங்குகள் ஊருக்குள் வருவதால் ஏற்படும் பிரச்சினை என கதை போகும். ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக நடிக்கிறார்.

அவர் தாத்தாவாக பாரதிராஜாவும் காதலியாக இவானாவும் நடித்துள்ளனர். நான் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவன் என்பதால் எனக்கு நன்றாகத் தெரிந்த அந்தப் பகுதியிலேயே படப்பிடிப்பு நடத்தினோம். யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக படத்தில் யாருக்கும் மேக்கப் இல்லை. ஷூட்டிங் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, படப்பிடிப்பு நடந்த அட்டனை என்ற மலைக்கிராமத்துக்கு வந்து அந்தப் பகுதியை நன்றாக அறிந்துகொண்டு ஜி.வி.பிரகாஷ், நடித்தார்.

படத்தில் யானைகள் தொடர்பான காட்சிகள் இருக்கின்றன. இதற்காக கேரளாவில் இருந்து பயிற்சி பெற்ற ஆறு யானைகளை அனுமதி பெற்று கொண்டுவந்தோம். யானைகளை வைத்து படமாக்குவது கடினமாக இருந்தது. இந்தப் படம் யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருக்கும். சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட அரிசிகொம்பன் யானையும் இந்தப் படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அனைத்துத் தரப்பினருக்கும் இந்தப் படம் பிடிக்கும். இவ்வாறு பி.வி.சங்கர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE