“இது தேர்தல் நேரம்... மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” - ரஜினிகாந்த் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: “எனக்கு மருத்துவர்கள் மீதும், செவிலியர்கள் மீதும் நல்ல மரியாதை உண்டு. அவர்களின் உதவியாலும், முன்னணி தொழில்நுட்ப வசதிகளாலும் தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இது தேர்தல் நேரம்; மூச்சுவிடக்கூட பயமாக உள்ளது.” என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினிகாந்த் மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், “நான் கடந்த 25 ஆண்டுகளாக எந்த கட்டிட திறப்பு விழாக்களிலும் பங்கேற்கவில்லை. அப்படி கலந்துகொண்டால், உடனே நான் அதன் பாட்னர், எனக்கும் அதில் பங்கு உள்ளது என சொல்லிவிடுகிறார்கள். அதனால் நான் எதிலும் பங்கேற்பதில்லை.

எனக்கு மருத்துவர்கள் மீதும், செவிலியர்கள் மீதும் நல்ல மரியாதை உண்டு. அவர்களின் உதவியாலும், முன்னணி தொழில்நுட்ப வசதிகளாலும் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் காவேரி மருத்துவமனை எங்க உள்ளது என கேட்டால் கமல்ஹாசன் வீட்டு பக்கத்தில் என சொல்வார்கள்.

இன்று கமல்ஹாசன் வீடு எங்கே என்று கேட்டால் காவேரி மருத்துவமனை அருகில் உள்ளது என்கிறார்கள். கமல்ஹாசன் எதையும் நினைத்துக்கொள்ள வேண்டாம். “கமல்ஹாசனை கலாட்டா செய்த ரஜினி” என ஊடகத்தினர், எழுதிடவேண்டாம். சும்மா சொல்கிறேன்” என்றார்.

மேலும், “இந்நிகழ்வில் பேச வேண்டாம் என நினைத்தேன். பேச சொல்லி சொன்னார்கள். இத்தனை மீடியா நண்பர்களையும், கேமராவையும் பார்த்தேன். இது தேர்தல் நேரம் வேறு. மூச்சு விடக்கூட பயமாக உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE