ரஜினி கமல் என 15 அவதாரம்! - ‘டபுள் டக்கர்’ பற்றி தீரஜ்

By செய்திப்பிரிவு

சென்னையின் பிரபல இதய நோய் சிகிச்சை நிபுணர் தீரஜ். மருத்துவராக ஒருபக்கம் தீவிரமாக இருந்தாலும் மறுபக்கம் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அவர், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டபுள் டக்கர்’. அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கிஇருக்கும் இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். படம்பற்றி கேட்டால் நிறுத்தாமல் பேசுகிறார் தீரஜ்.

“சின்ன வயசுலயே எல்லோருக்கும் இருக்கிற மாதிரி எனக்கும் நடிகனாகும் ஆசை இருந்தது. டாக்டர் ஆகணுங்கற ஆசையும் இருந்தது. ஏன் டாக்டர்னா, ஏழைகளுக்கு மருத்துவ உதவி பண்ணலாம்னுதான். இப்பவும் நான், கன்சல்டிங் பீஸ் வாங்கறது இல்லை. டாக்டர் ஆனதுக்குப் பிறகு, என் மனசுக்குள்ள இருக்கிற நடிகன் வெளியே வரணும்னு நினைச்சான். சினிமா பெரிய செலவுகள் கொண்ட துறை. இருந்தாலும் இறங்கலாம்னு முடிவு பண்ணி நடிக்க ஆரம்பிச்சேன். இப்ப இது எனக்கு மூன்றாவது படம்”- உற்சாகமாகிறார் தீரஜ்.

‘டபுள் டக்கர்’ல என்ன சொல்றீங்க?

மெசேஜ் அப்படின்னு பெருசா இல்லை. ஆனா, உள்ள வந்தா, மனசுவிட்டு சிரிச்சுட்டுசெம ஜாலியா போகலாம். அதுக்கு என்னலாம் பண்ணணுமோ, அதை திரைக்கதையில பண்ணியிருக்கோம். எல்லாருக்குள்ளயும் நல்லவனும் கெட்டவனும் இருப்பான். இவங்க ரெண்டு பேரும், இறந்த பிறகு தான் வெளிய வருவாங்க. எவ்வளவு நல்லது பண்ணியிருக்கோம், எவ்வளவு கெட்டது பண்ணியிருக்கோம், அதை வச்சு வாழ்க்கைக்கு பிறகு என்னநடக்குதுன்னு கதை போகும். இது இறந்ததுக்குப் பிறகு நடக்கிற கதையை கொண்ட படம்.

இயக்குநர் ஐந்தே நிமிடத்துல இம்ப்ரஸ் பண்ணிட்டார்னு பாடல் வெளியீட்டு விழாவுல சொன்னீங்களே? எப்படி?

வந்து உட்கார்ந்ததுமே, ‘நீங்க ஹீரோ கிடையாது, கதைதான் ஹீரோ’ன்னு ஆரம்பிச்சார். அதுவே இம்ப்ரஸ் பண்ணுச்சு. ஏன்னா, கதைதான் முக்கியம், அதுதான் ஹீரோன்னு நான் எப்பவும் நம்பறவன். பிறகு கதை சொல்ல ஆரம்பிச்சார். என்னால சிரிப்பை அடக்க முடியல. ஒரு கட்டத்துல, ‘பிரதர் விடுங்க, நான் கொஞ்சம் சிரிச்சுக்கிறேன்’னு சொல்ற அளவுக்கு கதை போச்சு. என்னால இவ்வளவு சிரிக்க முடியுதுன்னா, கண்டிப்பா ரசிகர்களுக்கும் பிடிக்கும்னு தோணுச்சு. படத்தை ஆரம்பிச்சுட்டோம்.

பிரீ புரொடக்‌ஷன் வேலைகள் மட்டுமே ஒரு வருஷம் நடந்ததாமே? ஏன்?

இன்னைக்கு தியேட்டருக்கு வந்துபடம் பார்க்கிறாங்கன்னா, அவங்களுக்கு ஏதாவது வித்தியாசமாகவோ, புதுமையாகவோ, மகிழ்விக்கிற மாதிரி படத்துல இருக்கணும். அதுக்கு என்ன பண்ணலாம்னு ரொம்ப யோசிச்சு இயக்குநர் திரைக்கதை அமைச்சிருக்கார். அதுக்கு அவ்வளவு காலம் தேவைப்பட்டது. அவர் மட்டுமில்லாம படத்துல வேலை பார்த்திருக்கிற எல்லாருமே கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறாங்க. என் படம் அப்படிங்கறதுக்காகச் சொல்லலை, கண்டிப்பா ரசிகர்களுக்கு பிடிக்கிற மாதிரி பல விஷயங்கள் இருக்கு.

போஸ்டர்ல உங்கள் தோள்ல இரண்டு அனிமேஷன் கேரக்டர்கள் இருக்குதே?

கதைப்படி என் கேரக்டர்பெயர் அரவிந்த். சின்ன வயசுலயே அப்பா அம்மா இல்லாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருத்தன். முகத்துல காயம் இருக்கும். அதனால அதிகமான கேலிக்கு உள்ளாகுறான். எங்க போனாலும் அவனுக்குப் பிரச்சினை. இந்த வாழ்க்கையே வேண்டாம்னு நினைக்கிறப்ப, ரெண்டு ஏஞ்சல்ஸ்... அதுதான், அந்த அனிமேஷன் கேரக்டர்கள் வந்து, அவனைக் காப்பாத்தும். நல்லது பண்ணணும்னு நினைச்சு அந்த ஏஞ்சல்ஸ் பண்ற அலப்பறைகளால அவன் என்ன பாடுபடறான் அப்படிங்கறதுதான் திரைக்கதை. இந்த கேரக்டர்களை கிராபிக்ஸ்ல பண்ணினோம். அனிமேஷன் கேரக்டர்கள் ஒரு படத்துல கடைசிவரை வர்றது இதுதான் முதன்முறைன்னு நினைக்கிறேன். இந்த கேரக்டர்கள் ரஜினி, கமல்னு 15 அவதாரம் எடுக்கும். நான் ரெண்டு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.

ஹீரோயின் ஸ்மிருதி வெங்கட் பற்றி...

தமிழ்ப் பேச தெரிஞ்ச ஹீரோயின் வேணும்னு முடிவு பண்ணினோம். அப்படி சொல்றதை சரியா உள்வாங்கிகிட்டு நடிக்க முடியும்னு நினைச்சோம். நிறைய பேரை அலசி பார்த்தோம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. என் உயரத்துக்கும் ஏற்ற மாதிரி சரியான நாயகி தேவைப்பட்டாங்க. கடைசியா ஸ்மிருதி வெங்கட் அமைஞ்சாங்க. படத்துலயும் அவங்களுக்கு நல்ல கேரக்டர்.

ஒரு முழு பாடலை கிராபிக்ஸ்ல பண்ணியிருக்கீங்களாமே?

ஆமா. வித்யாசாகர் இசை அமைச்சிருக்கார். முதல்ல கதை சொல்லும்போது யோசிச்சார். படத்தைப் பார்த்துட்டுப் பாராட்டி உற்சாகமா இசை அமைச்சிருக்கார். கதைப்படி அனிமேஷன் கேரக்டர்கள் வர்ற பாடலை முழுவதும் கிராபிக்ஸ்ல பண்ணியிருக்கோம். செலவுஅதிகம்தான். இருந்தாலும் அந்தப் பாடலைரசிகர்கள் கொண்டாடுவாங்கன்னு நம்பறேன். கோடை விடுமுறையில படத்தை வெளியிட இருக்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE