“ஒரிஜினல் ஸ்கிரிப்ட் வேறு” - ‘லால் சலாம்’ ரஜினி கதாபாத்திரம் குறித்து ஐஸ்வர்யா

By செய்திப்பிரிவு

சென்னை: “ஒரிஜினல் ஸ்கிரிப்டில் இடைவேளைக்குப் பின் தான் மொய்தீன் பாய் வருவார். படம் பார்த்து முடித்தபோது மாற்றங்கள் தேவைப்பட்டன., வெகுஜன ரசனைக்காக முதல் பாதியிலும் ரஜினியை காட்ட வேண்டியிருந்தது. படம் குறித்த பாராட்டுகளையும், விமர்சனங்களையும் சரிசமமாக ஏற்றுக்கொள்கிறேன்” என ‘லால் சலாம்’ படம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘லால் சலாம் படத்தில் ரஜினியின் சிறப்புத் தோற்றத்தின் நீட்சி குறித்து பேசுகையில், “லால் சலாம் படத்தின் கதை எழுதும்போது, ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரம் மொத்தமாகவே படத்தில் 10 நிமிடம்தான் இருக்கும். அந்தக் கதாபாத்திரம் படத்தில் மற்றொரு கதாபாத்திரம் அவ்வளவே. அதில் ரஜினிகாந்த் நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரத்தை எங்களால் 10 நிமிடங்கள் மட்டும் வைக்கமுடியவில்லை.

அவரைச் சுற்றி தான் படம் என ஆகிவிட்டது. அதுதான் சரியாகவும் இருக்கும். காரணம் அவ்வளவு வெயிட்டான ஒருவர் உள்ளே வரும்போது, அதைச்சுற்றி தான் படத்தை கொண்டு செல்ல முடியும். ஒரிஜினல் ஸ்கிரிப்டில் இடைவேளையிலிருந்து படத்தை மொய்தீன் பாய் எடுத்துக்கொண்டு செல்வார். அப்படித்தான் எழுதியிருந்தோம். ஆனால், படம் பார்த்து முடித்ததும், வெகுஜன ரசனைக்காக (கமர்ஷியல்) முதல் பாதியிலும் ரஜினியைக் காட்ட வேண்டிய நிலைமை இருந்தது.

முதல் பாதி முழுவதும் மொய்தீன் பாயை காட்டவில்லை என்றால் பார்வையாளர்கள் அயற்சி அடைந்துவிடுவார்கள். இதுபோன்ற பிரச்சினைகளால் படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன்பு எடிட்டிங்கை மீண்டும் மாற்றினோம். அவரை எப்படி முதல் பாதியில் கொண்டுவருவது என யோசித்தோம். ரஜினியை திரையில் காட்டியதற்கு பின் வேறு யாரையும் மக்கள் பார்க்க விரும்பவில்லை. இது பெரும் சவாலாக இருந்தது.

அதனை சரி செய்ய முடியவில்லை. கதை ரஜினியிடம் தொடங்கிவிட்டால் அவர் பாதையில் தான் அதை கொண்டு செல்ல முடியும். வேறு எதையும் காட்டி சமரசம் செய்ய முடியாது. அப்படியான திரை ஆளுமை அவர். அதை நான் இப்படத்தில் கற்றுக்கொண்டேன். படம் குறித்த பாராட்டுகளும், விமர்சனங்களும் வந்தன. இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொள்கிறேன். அடுத்த படங்களில் திருத்திக்கொள்வேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE