ஏ.ஆர்.ரஹ்மான் மீதான விமர்சனமும், சந்தோஷ் நாராயணன் பதிலும் @ ‘என்ஜாய் எஞ்சாமி’ சர்ச்சை

By செய்திப்பிரிவு

சென்னை: ‘என்ஜாய் என்சாமி’ பாடல் தொடர்பான சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு யூடியூபில் வெளியான பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. அறிவு எழுதிய இப்பாடலை தீ பாடியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்ற இப்பாடல் யூடியூபில் இதுவரை 48 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. இந்த பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் பேசிய அவர், “என்ஜாய் எஞ்சாமி வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. பாடலுக்கான 100 சதவீத உரிமை மற்றும் ராயல்டி எங்களிடம்தான் இருக்கிறது. ஆனால் இதுவரை இந்த பாடல் மூலம் எங்களுக்கு ஜீரோ வருமானம் மட்டுமே கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக, மாஜா நிறுவனத்தை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தோம். இதில் சில சிறந்த, உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். எங்கள் யாருக்கும் இதுவரை எந்த வருமானமும் கிடைக்கவில்லை” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாஜா நிறுவனத்தின் அம்பாசிடர் என்ற முறையில் ஏ.ஆர்.ரஹ்மானை பலரும் இணையத்தில் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் எக்ஸ் தளத்தில் ஒரு விளக்கப் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ”எனது அன்புக்குரிய ஏ.ஆர்.ரஹ்மான் சார், இந்த ஒட்டுமொத்த மாஜா பிரச்சினையிலும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாம எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். பல போலி வாக்குறுதிகள் மற்றும் தீய நோக்கங்களுக்கு அவரும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். மிக்க நன்றி சார்.

அறிவு, தீ, எஸ்விடிபி மற்றும் நான் உட்பட பல சுயாதீன கலைஞர்களுக்கு எந்தவகையிலும் வருவாய் கிடைக்கவில்லை. நாங்கள் இமெயில்களால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம். இந்த தருணத்தில் சுயாதீன கலைஞர்களை ஆதரிக்குமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

வரும் நாட்களில் என்னுடைய வழிகாட்டி பா.ரஞ்சித் மற்றும் ராப் பாடகர் அறிவு ஆகியோருடன் இணைந்து பணிபுரிவேன். அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள். மேலும் அனைத்து சுயாதீன கலைஞர்களுக்கும் அவர்களின் கட்டண நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறேன்” என்று சந்தோஷ் நாராயணன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE