அண்ணாவின் ஆசை: கே.பாலாஜி தயாரித்த முதல் படம்

By செய்திப்பிரிவு

இந்தியில் துலால் குஹா இயக்கத்தில் தர்மேந்திரா, அசோக் குமார், தனுஷா நடித்து வெளியான படம், ‘சாந்த் அவுர் சூரஜ்’. 1965-ம் ஆண்டு வெளியான இதன் தமிழ் ரீமேக் ‘அண்ணாவின் ஆசை ’!. ஜெமினி கணேசன், சாவித்திரி,கே.ஆர்.விஜயா, பாலாஜி, நாகேஷ் ,மனோகர், மனோரமா, சாரங்கபாணி,பேபி ஷகிலா , அடூர் பங்கஜம் உட்பட பல ர் இதில் நடித்தனர்.

இந்தி நடிகர் அசோக் குமார் கவுரவ வேடத்தில் நீதிபதியாக நடித்திருந்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப் படம் இது. படத்தின் டைட்டிலில் அவர் பெயரைத்தான் முதலில் போட்டிருப்பார்கள்.

வேலையை இழந்துவிடும் ஜெமினி கணேசன் மனைவி சாவித்திரியுடன் கஷ்டப்படுகிறார். எம்.பி.பி.எஸ் படிக்கும் தம்பி பாலாஜிக்குத் தேவைப்படும் பணத்துக்காக ஒரு நாடகம் ஆடுகிறார். ரயில் பாதையில் கிடக்கும்சிதைந்த உடலுக்குத் தனது மோதிரத்தை அணிவித்து தனது டைரியையும் அங்கு விட்டுவிட்டுச் செல்கிறார். ஜெமினி கணேசன் இறந்துவிட்டதாகக் கருதி அவருக்கான இன்சூரன்ஸ் பணம் சாவித்திரிக்குக் கிடைக்கிறது. அதை வைத்து பாலாஜியை படிக்கச் சொல்கிறார் சாவித்திரி.

ஆனால் படிப்பில் விருப்பம் இல்லாத பாலாஜி, அந்தப் பணத்தை ரேஸில் செலுத்தி பணக்காரர் ஆகிறார்.தொழிலதிபர் மகள் கே.ஆர்.விஜயாவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சாவித்திரியின் குடும்ப நண்பரும் வழக்கறிஞருமான மனோகருக்கு, ஜெமினி உயிரோடு இருப்பது தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

அந்த காலகட்டத்தில் வந்த வழக்கமான சினிமா கதைகளில் இருந்து இது வித்தியாசமாக இருந்ததால், இந்தப் படம் பாராட்டப்பட்டது.

இதில் ரவி என்ற கேரக்டரில் நடித்தகே.பாலாஜி, தனது சுஜாதா சினிஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த முதல் படம்இது. தாதா மிராசி இயக்கினார். வசனத்தைப் பெருமான் எழுதினார். கமால் கோஷ் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். கண்ணதாசனும் வாலியும் பாடல்களை எழுதினர்.

‘கோவிலிலே வீடு கட்டி கோபுரத்தில் கூடு கட்டி’, ‘பூப்போல் மலரமொட்டு வைத்தான்’, ‘பாட்டெழு தட்டும் பருவம்’, ‘இன்பம் என்பது என்னவென்றொருவன் இறைவனைக் கேட்டானாம்’, ‘துன்பம் என்பது என்ன என்றொருவன்’ ஆகிய பாடல்கள் கவனிக்கப்பட்டன.

1966-ம் ஆண்டு இதே தேதியில் வெளியானது இந்தப் படம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE