“நான் துன்புறுத்தப்படவில்லை” - பாலாவின் ‘வணங்கான்’ சர்ச்சைக்கு நடிகை மமிதா விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பின்போது தன்னை இயக்குநர் பாலா அடித்ததால் அப்படத்திலிருந்து விலகியதாக நடிகை மமிதா பைஜு கூறியது சர்ச்சையான நிலையில், தற்போது அந்த விவகாரம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை மமிதா பைஜு, “வணங்கான் படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலா அடித்ததால் படத்திலிருந்து விலகினேன்” என்று கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இயக்குநர் பாலா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த சர்ச்சை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மமிதா பைஜு விளக்கமளித்துள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பகுதியில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு தமிழ் திரைப்படம் குறித்து இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு படத்தில் விளம்பரத்துக்காக கொடுக்கப்பட்ட அந்தப் பேட்டியிலிருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்து பகிரப்பட்ட அந்த வீடியோவில் கூறப்பட்டவை தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

படத்தின் முன் தயாரிப்பு பணிகள் உட்பட ஒரு வருடத்துக்கு மேலாக இயக்குநர் பாலாவுடன் பணியாற்றியிருக்கிறேன். நான் ஒரு சிறந்த நடிகையாக மாற வேண்டும் என்பதற்காக அவர் எப்போதும் என் மீது அன்பு காட்டினார். அந்தப் படத்தில் நான் பணிபுரிந்தபோது மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ எந்த விதமான துன்புறுத்தலையோ அல்லது துஷ்பிரயோகத்தையோ நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று நடிகை மமிதா பைஜு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE