முதல் பார்வை: மதுரவீரன்

By உதிரன்

அப்பாவின் மரணத்துக்குக் காரணமானவனைக் கண்டுபிடிக்கவும், தன் சொந்த ஊரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடத்தவும் புறப்படும் இளைஞனின் கதையே 'மதுரவீரன்'.

மதுரை மாவட்டத்தில் சத்திரம்பட்டி கிராமத்தில் மக்கள் மனதில் பெரிய மனிதராக வலம் வருகிறார் சமுத்திரக்கனி. சாதி பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சினை என சுற்றி இருக்கும் கிராமங்கள் முழுக்க பிரச்சினைகள் உருவெடுக்க அதை தீர்க்க நினைக்கிறார். ஆனால், வேல ராமமூர்த்தி, மைம் கோபியால் பிரச்சினைகள் பெரிதாகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் எல்லோரையும் வாடிக்கு அழைப்பேன், விரைவில் இன்னொரு சமூகத்தைச் சார்ந்தவர்களையும் கோயிலுக்குள் வரவழைப்பேன் என்கிறார் சமுத்திரக்கனி. அதற்கு வேல ராமமூர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். எதிர்ப்பை மீறி ஜல்லிக்கட்டு நடத்த தயாராகும் சமுத்திரக்கனி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதனால் சமுத்திரக்கனி குடும்பம் மலேசியா சென்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்புகிறது. சமுத்திரக்கனியின் மகன் சண்முக பாண்டியன் பெண் பார்க்கும் படலத்திற்காக ஊருக்கு வருவதாக அம்மாவை நம்பவைக்கிறார். சொந்த ஊரான சத்திரப்பட்டிக்கு வந்ததும் அப்பாவைக் கொன்றது யார், ஜல்லிக்கட்டு பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிய முயற்சி செய்கிறார். அந்த முயற்சிகள் என்ன ஆகின்றன, அதன் விளைவுகள் என்ன என்பது மீதிக் கதை.

சாதிகள் குறித்து கலகக்குரல் எழுப்பாமல் ஒற்றுமை குறித்த சிந்தனையை விதைக்கும் படத்தை எடுத்து, ஏற்றிருக்கும் இயக்குநர் பொறுப்புக்கு நியாயம் செய்திருக்கிறார் முத்தையா. அவரின் அக்கறை மதிக்கத்தக்கது.

சண்முகபாண்டியன் 'சகாப்தம்' படத்தைக் காட்டிலும் நடிப்பில் முன்னேறி இருக்கிறார். ஆனால், காதல், எமோஷன் என எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி பேசுவது நெருடுகிறது. சண்டைக் காட்சிகளில் மட்டும் கவனிக்க வைக்கிறார்.

சாதி - சமூகம் சார்ந்த படங்கள் என்றாலே வேல ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, மாரிமுத்து ஆகியோர் தவறாமல் இடம் பெறுவது என்ன மாதிரியான டிசைன் என்பது தெரியவில்லை.

பல படங்களில் பதிவு செய்த கதாபாத்திரம்தான் என்றாலும் மிடுக்கு குறையாமல், அதே சமயம் மிகையான ரியாக்‌ஷன்கள் தருகிறார் வேல ராமமூர்த்தி. மாரிமுத்து கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் இயல்பாகப் பொருந்திப் போகிறார். மைம் கோபி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியின் உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்துகிறார்.

படத்தின் மையப் பாத்திரமாகவும், ஜீவனாகவும் இருப்பது சமுத்திரக்கனி கதாபாத்திரம்தான். படத்தை தாங்கி நிற்கிறார் என்று நினைத்தால், அந்த சமயத்தில் கருத்தூசி போட்டு காலி பண்ணுகிறார்.

பாலசரவணன், நான் கடவுள் ராஜேந்திரனின் காட்சிகள் நகைச்சுவைக்குப் பதிலாக எரிச்சலையே வரவழைக்கின்றன.

மீனாட்சி இயல்பான பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பிரதிபலிக்கிறார். உன் நெஞ்சுக்குள்ள பாடலில் சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில் ஈர்க்கிறார்.

படத்தின் ஆகப் பெரிய பலம் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புதான். முத்தையாவின் ஒளிப்பதிவு ஜல்லிக்கட்டு பின்னணி, மதுரை நிலவியல் அமைப்பை கண்களில் கடத்துகிறது. சந்தோஷ் தயாநிதி இசையில் காப்பாத்து கருப்பா, என்ன நடக்குது நாட்டுல, உன் நெஞ்சுக்குள்ள, கொம்புல கொம்புல பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

மிக சுவாரஸ்யமான ஒன்லைனைப் பிடித்த இயக்குநர் முத்தையா, அதை திரைக்கதையாக வடிவமைத்த விதத்தில் சறுக்கி இருக்கிறார். அப்பாவைக் கொன்றவனைத் தேடும் படலத்துக்காக சண்முகபாண்டியன் போதிய மெனக்கிடல் இல்லாமல் ஊரில் திரிவது படத்தின் பலவீனத்தைக் காட்டுகிறது. நகைச்சுவை சுத்தமாக எடுபடவில்லை. ஜல்லிக்கட்டு பிரச்சினை முழுவதுமாக படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மெரினா புரட்சி, விஜய் பேசும் வீடியோ காட்சி, உச்ச நீதிமன்றத் தடை என்று இரண்டாம் பாதியில் ஆவணப்படத்திற்கான கூறுகளே அதிகம் ஆக்கிரமிக்கின்றன. அதனால் திரைக்கதையில் தொய்வு ஏற்படுகிறது.

சமுத்திரக்கனியைக் கொன்றவர் யார் என்பது உடைபடும் இடமும் செயற்கையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனியைக் கொன்றது யார்? என்ற திசையில் திரைக்கதையை அணுகி இருந்தால் வேகம் பிடித்திருக்கலாம். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் படத்தின் ஆதார மையம் ஆட்டம் காண்கிறது.

மொத்தத்தில் சாதிப் பெருமை பேசாமல் சமூக ஒற்றுமை குறித்துப் பேசியதற்காக மதுரவீரனுக்கு தனித்த மரியாதை அளிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்