அமானுஷ்யத்தை அடிப்படையாகக் கொண்டு 6 இயக்குநர்களால் உருவாக்கப்பட்ட 6 கதைகளின் தொகுப்பே 6 அத்தியாயம்.
சூப்பர் ஹீரோ
சுப்பிரமணி தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாகக் கருதுகிறார். ஆந்திராவில் நடக்க இருந்த ஒரு ரயில் விபத்தை சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள மொட்டைமாடியில் இருந்தபடி தடுத்ததாகக் கூறுகிறார். வீட்டில் அவர் சாகசத்தை யாரும் நம்பத் தயாராக இல்லாததால் ஒரு மனநல மருத்துவர் முன் தன் கதையைச் சொல்கிறார். ஆதாரம் இருக்கா? என மருத்துவர் கேட்க, விமான விபத்தைத் தடுத்ததாகவும், ஸ்பென்சரில் வெடிக்க இருந்த வெடிகுண்டை எடுத்து கடற்கரையில் வீசியதாகவும் விவரிக்கிறார். இதை நம்புவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்த மனநல மருத்துவர் சுப்பிரமணியைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். நாளை சோதனைக்கு வா என்று சொல்லி, மிகப் பெரிய ஒரு பரிசோதனை முயற்சிக்கு தன்னை தயார்படுத்திக் கொள்கிறார் மருத்துவர். அந்த முயற்சி என்ன என்பது கிளைமேக்ஸ்.
சுப்பிரமணியாக தமன் குமார் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னை யாரும் நம்புவதே இல்லை என்ற கவலையை அவர் வெளிப்படுத்தும் விதம் ரசனை. மனநல மருத்துவராக இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். கேபிள் ஷங்கர் இயக்கிய இந்தப் படம் மிக முக்கியமான உளவியல் கூறைப் பேசுகிறது. ஆனால், முடிவை நம் யூகத்துக்கே விட்டு விடுவதால் படத்துக்கான பலம் உடைபடுகிறது.
இது தொடரும்
சாதாரணமாக பந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி, ஒருவரைப் பார்த்து அதிகம் பயப்படுகிறார். அவர் வருவது தெரிந்தாலே தடம் தெரியாமல் இருக்க ஒளிந்து கொள்கிறார். இதைக் கவனிக்கும் ஒரு இளம்பெண் ஏன் அவரைப் பார்த்து அச்சப்படுகிறாய்? என்று கேட்கிறார். அதற்கு ஒரு அதிர்ச்சியான பிளாஷ்பேக் சொல்கிறார் அந்தச் சிறுமி.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை அழுத்தமாகச் சொல்ல வேண்டிய படம் வெறுமனே கடந்துபோகிறது.
பாப் சுரேஷ், திவ்யா, சிறுமி சாதன்யா ஆகிய மூவரின் நடிப்பிலும் செயற்கைத் தன்மையே மிஞ்சுகிறது. வலுவாகச் சொல்ல வேண்டிய கருத்தை மிக சாதாரணமான காட்சிகளில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தியாகராஜன்.
மிசை
கல்லூரி இளைஞன் கிஷோர் தன்னுடன் படிக்கும் மதுஸ்ரீயைக் காதலிக்கிறார். அறை நண்பர்கள் இருவருக்கும் தெரியாமல் காதலை வளர்க்கிறார். கிஷோர் மீதான கோபத்தில் இருக்கும் அறை நண்பர்கள் பிரசன்னா கதிரும், ரான்டில்யாவும் அவனைப் பழிவாங்கும் நோக்கத்தோடு மதுஸ்ரீயின் புகைப்படத்துக்கு மாறி மாறி முத்தம் கொடுக்கிறார்கள். இதை அறிந்த கிஷோர் அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கத்தியுடன் வர, அங்கே திடீரென்று மதுஸ்ரீ என்ட்ரி ஆகிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே மிசை.
கதையிலும், தொழில்நுட்ப ரீதியிலும் பலவீனம் மட்டுமே தெரிகிறது. இயக்குநர் அஜயன் பாலாவின் திரை மொழி நம்மை எவ்விதத்திலும் கட்டிப்போடவில்லை. யூகித்த மாதிரியே கிளைமாக்ஸ் அமைந்துவிடுகிறது.
அனாமிகா
மாமா கேபிள் ஷங்கரின் நீண்ட நாள் வேண்டுகோளின் படி, அவரது வீட்டுக்குச் செல்கிறார் சஞ்சீவ். அவசர வேலையாக கேபிள் ஷங்கர் வெளியே செல்ல, தன்னந்தனியாக இருக்கும் சஞ்சீவ் பயத்தில் நடுங்குகிறார். கூப்பிடும் தூரத்தில் இருக்கும் தாத்தாவைப் பார்க்க மாமாவுடன் சென்ற போது, இளம்பெண்ணைப் பார்த்ததும் உற்சாகம் ஆகிறார். ஆனால், அப்படிப்பட்ட ஒரு பெண்ணே அங்கு இல்லை என்று மாமா போனில் சொன்னதும், சஞ்சீவுக்கு தூக்கிவாரிப் போடுகிறது. அன்றைய இரவை சஞ்சீவ் தனியாகக் கடக்க முடிந்ததா, நடந்தது என்ன? என்பதே அனாமிகா.
இஏவி சுரேஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சஞ்சீவ், கேபிள் ஷங்கர், தாத்தா செல்லத்துரை, காயத்ரி ஆகியோர் இயல்பாக தங்கள் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள். பேய் பயத்தில் இருக்கும் சஞ்சீவ் ஏன் சும்மா சும்மா தாத்தா வீட்டுக்கும், மாமா வீட்டுக்கும் ஓடிக்கொண்டே இருக்கிறார்?, பேய் பயத்தில் அலறும் சஞ்சீவ் எப்படி ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட வீடு என்று தெரிந்தும் தங்குகிறார் என்ற லாஜிக் கேள்விகள் இடிக்கின்றன.
சூப் பாய் சுப்பிரமணி
எந்தப் பெண்ணை நெருங்கினாலும் ஒரு பேய் வந்து தன்னை தொந்தரவு செய்கிறது. இதனால் காதலிக்காமல், கல்யாணம் ஆகாமல் இருக்கிறேன் என்று ஒரு சாமியாரிடம் சரண் அடைகிறார் விஷ்ணு. அவருக்கு நிகழும் பிரச்சினையை லைவ் ஆகப் பார்க்க ஆசைப்படும் சாமியார், ஒரு பெண்ணை போன் போட்டு அழைக்கிறார். உண்மையில் யார் அந்தப் பேய், ஏன் விஷ்ணுவை தொந்தரவு செய்கிறது என்பதை நகைச்சுவையாகச் சொல்லி இருக்கும் படம் சூப் பாய் சுப்பிரமணி.
லோகேஷ் ராஜேந்திரன் இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. ஆசிப் பிரியாணி இல்லாட்டியும் பசிக்கு அம்மா உணவகமாவது கிடைச்சா சரி உள்ளிட்ட சில இடங்களில் வரும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. முடிவு ஒன்லி காமெடி மேஜிக் ஆக உள்ளது.
சித்திரம் கொல்லுதடி
1939, 2013, 2016 என்று மூன்றுவித காலகட்டத்தில் நடக்கும் கதை. ஒரு சித்திரத்தை முழுமையாக வரைந்து முடிக்கும் எந்த ஓவியரும் உயிரோடு இருக்கமாட்டார். அதற்குக் காரணம் ஒரு அப்பாவிப் பெண்ணின் சபதமும், சத்தியமுமே காரணம். இது விதியா? சதியா? கட்டுக்கதையா? என்ன நடக்கிறது என்ற மர்மத்தை அவிழ்க்கிறது சித்திரம் கொல்லுதடி.
கதை, திரைக்கதை, தொழில்நுட்ப நேர்த்தி, கதாபாத்திரத் தேர்வு என அத்தனையிலும் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசனின் தேர்வு கச்சிதம். கோகிலாவுக்கான கதையில் சுவாரஸ்யமும், திகில் படத்துக்குரிய அம்சங்களும் அழகாக அணிவகுக்கின்றன. வினோத் பக்குவமான நடிப்பை வழங்கி முத்திரை பதிக்கிறார்.
குறும்படங்களின் தொகுப்பாக சில படங்கள் மலையாள சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் வெளி வந்திருக்கின்றன. பேய் என்ற ஒற்றை ஒற்றுமையைக் கொண்டு அதே வகையிலான ஆறு படங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் ஆந்தாலஜி சினிமா என்கிற வகையில் 6 அத்தியாயம் தமிழ் சினிமாவில் வரவேற்கப்பட வேண்டிய நல் முயற்சி. ஆனால், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப ரீதியில் இது தொடரும், மிசை, அனாமிகா ஆகிய படங்கள் பின்னோக்கி இருக்கின்றன. அதற்கு பட்ஜெட்டும் ஒரு பெரிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.
சூப் பாய் சுப்பிரமணி படம் நகைச்சுவையில் கொஞ்சம் சிரிக்க வைத்து தப்பித்து விடுகிறது. சித்திரம் கொல்லுதடி மட்டுமே படத்துக்கான எல்லா அம்சங்களிலும் ஈர்க்கிறது. 6 படங்களுக்கான கிளைமாக்ஸை இறுதியில் சொல்லும் விதம் நல்ல யோசனைதான். அது ரசிகர்களுக்கான ஈடுபாட்டை வளர்த்தெடுக்க உதவும்தான். ஆனால், அந்த ஐடியா 6 படங்களுக்கும் தொடர்வது புத்திசாலித்தனமாக இல்லை. அதுவும் முன்கதைச் சுருக்கத்தை மறு நினைவூட்டும் ஃப்ளாஷ் கட்டில் கச்சிதத்தைக் கடைபிடித்திருக்கலாம். ஆனாலும், வழக்கமும், பழக்கமுமான ஃபார்முலாவில் இருக்கும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்வதில் 6 அத்தியாயம் மாற்று முயற்சி என்பதை மறுப்பதற்கில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago